Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

நானாகிப் போனது

அப்பாவின் துணையோடு
ததும்பி வழியும் நீரமிலத்தின்
கரைமோதும் ஓசையிரவு.

அப்பிக் கொண்ட கறுப்பில்
நீரசைவில் கொடும் நினைவுகளின் ஒய்யாரம்
பெட்டிக்கடை சிமினி விளக்கின்
இருளோடு போராடும் ஒளி நான்.

காற்றின் நிழலாட்டம்
புதுவெள்ளத்தில் இறந்தவர்களின் பவனி
பயத்தின் உச்சத்தில் கவர்ந்திழுக்கும்
கரையும் பழக்கப்பட்ட பாதையும்

கஞ்சாவின் புகைமணத்தில்
இருட்டுக்குள் துழாவியதில்
வட்டமாக அமர்ந்திருக்கும் பெருசுகளின் மெல்லொலி

தூரத்தில் கரையோரம் பேசிக் கொள்ளும்
குரல்களின் நிதானமும் நெருக்கமும்
ஈரக்காற்றின் தீண்டலில்
நிலவொளியின் குளுமையில்
இருந்துவிட தோன்றினாலும் அப்பாவின் வருகை

நகர்ந்து செல்ல மனமில்லை
அப்பாவோடு வீட்டை நோக்கி
நிலவொளியும் நீரமிலமும் என்னில்
கரைந்து என்னைக் கரைத்து
நானாகிப் போனதின்று

மூத்தியென வற்றி நீரற்றுக்
கிடக்கும் கரை மோதிய கண்மாய்.

Exit mobile version