Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

குமார் சேகரன் கவிதைகள்

விருப்பு வெறுப்பு
கலந்த சொற்களை
மெளன பெட்டிக்குள் போட்டு
தாழிட்டு பூட்டொன்றால்
பூட்டி வைத்தேன்

விருப்பும் வெறுப்பும்
யார் பெரியவரெனும்
விவாதத்தைத் தொடங்கி
வாக்குவாதமாக்கிக் கொண்டிருக்கின்றன

மெளனத்தினுள்
பேரிரைச்சல்
கேட்கத் தொடங்குகிறது

இதோ
கையிலுள்ள
அப்பூட்டின் சாவியை
உருக்கிக் கொண்டிருக்கிறேன்
தனிமை தீயில்.


சிவப்புக் கம்பளம் விரித்து
தாரை தப்பட்டை
சங்கின் ஓசைகள் முழங்க
அமைதியாக காத்திருக்கிறேன்
மரணத்தை எதிர்பார்த்து

முகவரி தவறிய மரணம்
யார் யாரையோ தழுவி
ஒரு குருட்டு நத்தைப் போல்
நகர்ந்து கொண்டிருக்கிறது
என்னை நோக்கி…

எல்லோருரின் பார்வையிலும்
பல முகவரிகள்
கொண்டவன் நான்
மரணத்திற்கு மட்டும்
முகவரி ஏதும் அற்றவனாகிறேன் .


காற்று வீசாத
தருணத்தின் ஓரு நொடியில்
கிளையைப் பிரிந்த
பழுத்த இலையொன்று
மூன்று நான்கு முறை
சுழன்ற பின்
மரத்தின் நிழலில்
வந்து விழுந்தது

இது நாள் வரையில் தன்னுள்
ஓர் அங்கமாகிருந்த இலைக்கு
நிழல் கொடுப்பதைத் தவிர
வேறென்ன செய்திட முடியும்
இந்த மரம்

இது நாள் வரையில்
தன்னைச் சுமந்த மரத்திற்கு
உரமாவதைத் தவிர
வேறென்ன செய்திட முடியும்
உதிர்ந்த இலை


எங்கிருக்கிறாய்?
என்ன செய்கிறாய்?
சாப்பிட்டாயா?
என இப்படி
அடிக்கடி கேட்பவனிடம்
பெரும் எதிர்பார்ப்புகளென
வேறென்ன இருக்கப் போகிறது
இதே கேள்விகளைத்
தன்னிடம் கேட்கப்படுவதைத் தவிர
இப்படியே கேட்டு
பழகிப் போனவன்
பழக்கத்தை நிறுத்திக் கொள்ளும்
நிர்பந்தத்தின் வேளையில்
நன்கு உணர்கிறான்
ஓடு நொறுக்கப்பட்ட
நத்தை ஒன்றின்
தீரா ரணத்தை

Exit mobile version