Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்

அவளை நான்
மீண்டும் பார்த்தேன்
கொந்தளித்தது கடல் மனம்
அக்காலத்திலிருந்த இளமை
நடந்து சென்றது வீதியில்
அவளை மறவாத காலம்
முன்னும் பின்னும்
நகர்ந்து என்னைச் சீண்டியது
அவள் எங்கிருந்தாலும்
நினைத்த நேரத்தில்
என் முன்னே தோன்றினாள்
எப்படிப் போக வேண்டும்
அங்கே என்றால்
என் வழியே போகலாம்
அல்லது அவள் வழியில்
சாட்சியாக இருந்தவர்கள்
சொல்வார்கள் நான் பெற்ற
தண்டனை அவளது ஏமாற்றமென
அது ஒரு விதிக்கப்பட்ட
காதல் போல்
அடுத்து அடுத்து நிகழ்ந்த
பார்வையாலும் விருப்பத்தாலும்
அவ்வாறே இறப்பதற்கு
முன் உதித்தது


கதை

வலியால் துடித்தேன்
சாட்டையின் தோல்
நிறம் தெரிய
மின்னல் பொழுதில்
என் மனம் சொன்ன
கதையை நிதானமாக
நான் கேட்டேன்
இதயத்தின் கனத்தைச் சுமந்தபடி
தனிமையிலிருந்தேன்
உயிர் வாழும் மனிதர்களில்
நானும் ஒருவன்
பறவை ஒன்று
இங்கும் அங்கும்
பறந்தபடி இருந்தது
நான் என் அறையிலும்
நான் என் மனதிலும்
நான் என் கவனத்திலும்
தேடிக்கொண்டிருக்கிறேன்
இருப்பதில் கிடைப்பதை
இங்கே சொல்கிறேன்
ரகசியமாக உற்றுக் கேட்பவருக்கு


ஒரு நாள்

விடி காலையில்
செடியிலிருந்து
ஒரு மலர்
கீழே வீழ்வதை
நான் பார்த்தேன்
அத்தோடு அந்நாள் முடிந்தது
இனி எப்பொழுதும் போல்
அது ஒரு நாள்
எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது
அந்த பெரிய ஓவியத்தில்
தனியாக ஒன்றை
வரைந்து வைக்கலாம்
இப்பொழுது நானும் இருந்தேன்
அதன் கீழே எழுதிய
பெயரைப் போல்


சிறுவன்

அச்சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தான்
இன்று போலவே அன்றும்
அச்சிறுவனின் நிகழ்காலம்
பீதியுடன் இருந்தது
தெருவில் நடந்த அவன்
வானத்தைப் பார்த்தான்
விடுதலை கிடைத்தது
கிடைத்த அதை நண்பர்களோடு
மைதானத்தில் விளையாடினான்
பட்டாம் பூச்சி பிடிக்கப்போய்
அது தேர்ந்தெடுக்கும்
ஓட்டத்தைக் கண்டு
அதன் வண்ணம்
நிலையாய் நிற்க
அதன் கனவை
இன்று வரை காண்கிறான்
நினைவின் நதியில்
பெய்த மழையில்
நனைவது போல்
நின்றான் அவன்
வீட்டின் முற்றத்தில்
இன்று பெய்த மழையில்


Exit mobile version