Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்

கூடு

விளக்குமாற்றின்
ஒரு குச்சியை
உருவி

இன்னொரு குச்சியையும்
உருவி

இரண்டின் நுனி கூட்டிக் கவ்விக் காகம்
இடைவெளியில் ஊடுருவிப் பறக்கும்.

திரும்ப வரும்
தயங்கி.

அஞ்சிடுமோ
அது.?

எட்டி
அமர்வேன்.

திரும்பவும் திரும்பவும் வந்து
குச்சிகளை உருவிக் காகம்
கூர்ந்து நான் கவனித்துக் கொண்டே இருப்பதை ஊடுருவிச் செல்லும்.

கூடு கட்டுவதென்ன
சாமான்யமா?

ஒய்யாரமாய் ஆடும்
ஒற்றைத் தென்னையின் உச்சியில்
கூடு கட்டும் சாகசமே
தனி!

அதில்
அடைகாத்து
ஆகாயம் பார்த்து
ஓருயிர் பிறக்கும் சந்தோஷம்
அதனினும் தனி!


புன்னகைக்கும் புத்தர்

வலது நோக்க
புன்னகைக்கிறார்

இடது நோக்க
புன்னகைக்கிறார்

நேர் நோக்க
புன்னகைக்கிறார்

அப் புன்னகையிலே
ஆழ்ந்து லயிக்கும்
என்னையும்
அதே போல்
வலது
இடது
நேர்
நோக்கி
என் புன்னகையையும்
தன் புன்னகை போல் கருதிப்
புன்னகைக்கிறார்

அப்போதும்
இப்போதும்
இனி எப்போதும் புன்னகைத்தபடி
காலத்தூசி படியாது
புன்னகைக்கிறார்

தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்

இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்

தியானத்தில்
புத்தர்.

( குறிப்பு: அஜந்தாவில் ஒரு புன்னகைக்கும் புத்தர் சிற்பத்தின் முன் லயித்த அனுபவம்)


(அ)சாத்தியம்

நரி
பரியாகிய
அசாத்தியம்

மறுபடியும்
பரி நரியாகி
அசாத்தியம் நில்லாததாக

சாத்தியமாய் நிற்கும்
அசாத்தியம்

நரி
நரி தானோ?

பரி
பரி தானோ?


அதிகாலை

அந்த
அதிகாலை
ஆடை கலைந்து கிடக்கும்.

எந்த
ஒரு குரலின்
காம விரலும்
இப்போது வரை தீண்டவில்லை.

ஆசைப்படாது
அவதானிக்கிறது அகம்.

நிச்சலனத் திரி அகத்தில்
நின்றெரிகிறது.

அதனடியில்
நிழலில்லை.


Exit mobile version