Site icon சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

காலை

பறவையின் ஒலியில்
நான் உட்பட
காற்றில் கலந்து போனேன்
ஈரக் காற்றில்
விடிந்த பொழுது
இரவைக் குடித்து முடித்திருந்தது
குளித்து முடித்த
கூட்டமான இலைகளைச்
சூடிய மரங்கள் திம்மென்று
என்னை நட்டு வைத்தது
ஓசையிலே என்
ஞாபகத்தின் கீற்று
கடிகாரத்தின் முட்களென
எனது காலத்தைச் சொல்லியது
நானும் நானும் நானுமென
அடித்துக் கொள்ளும் இதயம்
மறைந்த மரகதம்
வரைந்த ஓவியத்தில்
உயிர் பெற்றது
கலை இனி


வழியற்றவன்

வழியுமில்லை விருப்பமுமில்லை
இருக்கும் பாதையில் இருப்பது
அவமானமும் அர்த்தமின்மையும்
நீண்டகாலமாய் சுமக்கும்
ஒருவனின் இதயத்தில்
தண்ணீரின் கலங்களில்
படும்படி வீசும் காற்றில்
ஒரு கத்தியை நான் பார்த்தேன்
ஒரு காலத்தின்
மனிதர்களுள் நானும் ஒருவன்
ஞாபகத்தில் இழந்த
பொழுதுகளில் வாழும்
ஒரு ஆளினுள்
மறைந்திருக்கும் நான்
இன்னொருவரின் கண்ணாடியில்
தெரிகிறேன்
பிரதியான அடுக்குகளிலிருந்து
தனி மனித சரித்திரத்தை
கணத்துக்குக் கணம்
படிக்கிறேன்


அந்தி

எத்தனை பேசினாலும்
புரிந்தது போக
மிச்சம் நிறைய இருந்தது
சொல்லில் பொருள்
கொண்ட காலம்
கடந்துபோன நிலையில்
ஆதி மனிதனின்
கவலை இங்கே எடுபடவில்லை
ஒன்றை இருவர் பேசினால் இரண்டாகிறது
இலைகளின் சலனத்தில்
காற்றின் கட்டளை
மௌனத்தின் ஓசையில்
என் மனம் சொல்லும் கதையில்
அந்தியின் பீதி இயற்கையானது
இருள் நிரந்தரமாக
ஒரு நாள் ஓய்வெடுத்துக்கொள்கிறது
கடந்து போனதை
நாட்காட்டியில் குறித்த குறிப்புகள்
இறந்து போன எனது தினங்கள்


Exit mobile version