தஞ்சைக்கு அருகில் பிறந்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு, தஞ்சை பெரியகோயில் வாழ்வில் கடக்கமுடியாத அதிசயம்.
தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், மற்றும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் ஆகிய மூன்றுமே சோழர்காலக்கோயில்களின் சிற்பக்கலையின் உன்னதத்தை உரக்கச் சொல்பவை.
தஞ்சை மற்றும் கங்காபுரத்தின் கோயில்கள் இறைவன் மிகப்பெரியவன் என்பதை சொல்லாமல் சொல்லும் முயற்சியாக இருக்கிறது. இன்றும் பாங்காக் போன்ற நகரங்களில் தேரவாத பௌத்த மதத்தை பின்பற்றுபவர்கள் கோயில்களில் புத்தர் மிகப்பெரிய கோலத்தில் சயனித்திருப்பார்.
திரு.கல்கியின் பொன்னியின் செல்வன் ஏன் இத்தனை பெரிய சிவலிங்கத்திருமேனி வேண்டும் என்று ராஜராஜசோழர் (அருண்மொழி) நினைத்திருப்பார் என்பதற்கு அவர் இலங்கையில் கண்ட பிரமாண்டமான புத்தர் சிலைகளைக்கொண்டு பதில் சொல்லியிருக்கும்.
இதற்கு முன்னால் வாசித்திருந்த பொன்னியின் செல்வன், உடையார், கங்கை கொண்ட சோழன் போன்றவற்றிலிருந்து, கங்காபுரம் மாறுபட்ட வாசிப்பு அனுபவமாக இருந்தது. சொல்லப்பட்ட கோணம் தந்தையை விஞ்ச நினைக்கும் மகனின் வாழ்க்கை.
ஒரு ஆலமரத்தின் நிழலில் இன்னொரு ஆலமரம் உருவாக முடியாது என்பதாக தனக்கான தலைநகராக நீர் வளத்தை ஏற்படுத்தி, கங்காபுரத்தை உருவாக்குகிறார் ராஜேந்திரர்.
காலத்தால் மிக மிக பழமையானவை ஆரூரும், சிதம்பரமும்.
ஆலமரத்தின் நீழலில் அமர்ந்த பெருமான் தான் சிவபெருமான்.
முதல் பகுதியில், சரியான இடத்தில் இந்தப் புதினத்தை துவங்க, திருமதி. வெண்ணிலா அதிகம் உழைத்திருக்கிறார். மார்கழி திருவாதிரை நாள், தில்லை, திருவாரூர், கிள்ளை, தஞ்சை என்று பல இடங்களில் எப்படி இருக்கிறது என்பதை சொல்லி, அரசியல் ரீதியாக எப்படி இருந்திருக்கும் என்ற பார்வையை முன்வைக்கிறார்.
ராஜேந்திரரின் போர் முயற்சிகள் உள்பட அனைத்துக்கும் தோள்கொடுக்கும் ஆன்மாவின் காதலியாக தெளிவும், பலமொழி அறிவும் கொண்டவராக வீரமாதேவி கதாபாத்திரம் அழகாகப் படைக்கப்பட்டிருக்கிறது.
தன் வாழ்நாளில் இருந்த அரசர்களை விட அதிக போர்களங்களையும், கப்பல் பயணங்களையும் மேற்கொண்டவர் ராஜேந்திர சோழர். பரந்துபட்ட பார்வை என்பது இயல்பாக இந்தப்பயணங்களின் வழி அமைந்திருக்கும்.
அவர் தந்தையின் நிழலில் வாழும் மனிதர் அல்ல என்பதை அவரது உள்மனம் சொல்லாமலா இருந்திருக்கும்!
கதையில் சொல்லப்பட்ட கிளைக்கதைகள்: கொல்லம் பக்கத்திலிருந்த பாண்டிய வம்சத்தினரைக்கண்டு, பொலனருவா ஆலயத்தில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர்களின் மணிமுடியை கண்டுபிடித்தது, கோதாவரி ஆற்றில் யானைகளைப் பாலமாக்கி, வெற்றி பெற்ற போர்படையை ராஜேந்திரன் எதிர்கொண்டது, கடாரம் படையெடுப்பின் போது போர்வீரர்கள் விவசாயம் செய்தார்கள் என்று பலவும் படிக்க நன்றாக இருந்தன.
ஒரு வளரும் தேசத்துக்கான அறிகுறி, புதியத்தலைநகரை தீர்மானிப்பதும் தான். நீர் வளம் இல்லாத பகுதியில் எப்படி நீர் வளத்தை உண்டாக்கினார் என்று விவரித்திருப்பதானகாட்சிகள் இன்றைய பாட்டில் தண்ணீர் குடிக்கும் நம்மில் பலருக்கு பிரமிப்பானவை.
கோயிலுக்கான மரங்களைத்தேர்வு செய்வது, கோயிலுக்கான திட்டமிடுதல் என்று பலவற்றுக்கானத் தரவுகளை சேகரித்து எழுதியிருக்கிறார். என்ன புத்தகங்கள், செப்பேடுகள், மற்ற வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களிலிருந்து குறிப்புகளை எடுத்துக்கொண்டார் என்பது பற்றிய தகவல்களைக் கொடுக்கவில்லை. ஓரிரு இடங்களில் மட்டுமே குறியிட்டு திருவாலங்காட்டு செப்பேடு என்று குறிப்பு இருக்கிறது.
இந்தப் படைப்பின் நோக்கம் என்ன?இத்தனை போராட்டத்திற்கு பின் நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை தமிழர்கள் கலை உணர்வோடும், பக்தி உணர்வோடும் அணுக வேண்டும் என்பதா? கோயில்களை கற்றளிகளாக அமைத்த அரசர்கள் தங்கள் அரண்மனைகளை நிலைத்திருக்க செய்யவில்லை என்பதிலிருந்து அவர்கள் கொண்டிருந்த பக்தி உணர்வை சொல்வதா?
வராலாற்றுப் புதினத்தை எழுதும்போது எத்தனை தரவுகள் சரியாக இருக்கின்றன; வரலாற்றை மாற்றிச்சொல்லாத பொறுப்புணர்வோடு எழுதப்படுகின்றன என்பது மிகமுக்கியமாகிறது.
திரு.பாலகுமாரனின் உடையார் ராஜராஜசோழனின் சிவபக்தி எப்படி எல்லாம் சோதிக்கப்படுகிறது என்பதாக அரசனின் மனஉணர்வுகளையும், இத்தனைப்பெரிய கோயிலை நிர்மாணிக்க அரசனோடு தோள்கொடுத்த அநிருத்த பிரம்மராயர், பஞ்சவன்மாதேவி, ராஜேந்திர சோழர், கருவூர் தேவர் என்று அனைவரின் கதாப்பாத்திரங்களையும் நயம்பட சொல்லியிருக்கும்.
உடையார் எழுதப்பட்ட பிறகு இன்னும் அதிகம் பேர், மாதந்தோறும் கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் பயணமாக தஞ்சைக்கோயிலை ரசிக்க வருகின்றனர்.
திருமுறை என்பது தேவாரம் மட்டுமல்ல. திருமுறைக்கண்ட சோழன் எழுப்பிய தஞ்சை பெரியகோயிலுக்கு தேவாரப்பதிகங்கள் என்று ஒன்றும் இல்லை. காலத்தால் பின்தங்கியதால் மூவர்ப்பாடல்கள் இந்தத் தலங்களுக்கு அமையவில்லை. அந்தக்குறையைத்தீர்க்குமாறு, கருவூர்த்தேவர் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடல்களில், பல சோழர்காலக்கோயில்களைப்பற்றிப்பாடியுள்ளார்.
பண்ணிய தழல்காய் பாலளாம் நீர்போற்
பாவமுன் பறைந்துபா லனைய
புண்ணியம் பின்சென் றறிவினுக் கறியப்
புகுந்ததோர் யோகினிற் பொலிந்து
நுண்ணியை யெனினும் நம்பநின் பெருமை
நுன்னிடை யொடுங்கநீ வந்தென்
கண்ணினுண் மணியிற் கலந்தனை கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.
இம்மாதிரிப்பாடல்கள் பற்றிய நிகழ்வுகள் புனைவுகளை சேர்த்திருந்தால் கூட இன்னும் அழகாக இருந்திருக்கும்.
கவிஞரான வெண்ணிலா, கதையின் போக்கில் ராஜேந்திரனுக்கும் வீரமா தேவிக்குமுண்டான காதலானத் தருணங்களை, நார்த்தாமலை சுனைகள், கிள்ளைப்பகுதியின் படகு என்று, கவித்துமாகவே எழுதியிருக்கிறார்.
கருவூர் தேவர் வயதில் மூத்தவராக வயோதிகத்தை அடைந்ததவராக ஒரே ஒரு காட்சியில் மட்டும் வந்து போகிறார். அது ஏன் என்று தெரியவில்லை. அவர் ராஜராஜனுக்கு மட்டும் அல்ல, அவர் மகன் எழுப்பிய ஆலயத்திற்கும் சேர்த்துதான் பதிகம் பாடியிருக்கிறார்.
கண்டராதித்தர் திருவிசைப்பா பாடிய புலவர். கருவூர் தேவரும் அப்படித்தானே. ஏன் ஒருவரை மட்டும் சொல்லி, ஒருவரை விட வேண்டும்?
துறவிகள் என்று வந்து போகும் கதாபாத்திரங்கள் யாருக்கும் சமநோக்கு பார்வை இல்லை- சதுரத்தடிகள், சர்வசிவபண்டிதர் என்று எல்லாருக்கும் அவரவர் கருத்தைப்பற்றிய பிடிப்பு இருக்கிறது. உதாரணம் :”கருவூர்த்தேவர் கம்மாளர் என்று சர்வசிவபண்டிதர் சொன்னாராம்”. அதனாலேயே அவர்கள் அழுத்தமான கதாபாத்திரங்களாக இல்லை.
அநிருத்த பிரம்மராயரின் மகன், ராஜேந்திரரரின் அமைச்சராக்கத்தொடர்ந்தார். அவர் கதாபாத்திரம் என்று ஒன்றும் பெரிதாகச் சொல்லப்படவில்லை.
அணுக்கி பரவை நாச்சியார் திருவாரூர் கோயிலுக்குக்கொடுத்த கொடைகள் மிக அதிகம். அவரை ஆழித்தேரில் ஏற்றி வலம் வந்தார் என்பது நிச்சயம் சொல்லப்படவேண்டிய வரலாற்று நிகழ்வு. பாராட்டுக்கள்!
பதிகங்கள் வேதங்களுக்கு மாற்றானவை என்று எங்கும் திருமுறையை எழுதிச் சென்றவர்கள் சொல்லவில்லை. அவர்கள் கருத்தில் குறுகிய எண்ணம் இல்லையோ என்னவோ, அதனால் தான் காலம் செல்லரித்தாலும் எத்தனையோ நூற்றாண்டுகளைத் தாண்டி இன்றும் நாம் தேவாரங்களைக் கேட்கிறோம்.
ஓரிரண்டு தேவாரப்பதிகங்களை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
- திருஞானசம்பந்தரின் காலம் ஏழாம் நூற்றாண்டு. அவரின் பதிகங்கள் தான் முதல் மூன்று திருமுறையில் இருக்கின்றன. “மறையுடையாய்” (திருநெடுங்களம் தேவாரம்), அங்கமும் நான்மறையும் அருள்செய்து (திருபாதாளீஸ்வரம் தேவாரம்) என்று பல இடங்களிலும்,மறைகளாக இருக்கிறார் சிவபெருமான் என்கிறார் திருஞானசம்பந்தர்.
- இது திருச்சிவபுரம் அப்பர் தேவாரத்தில் வரும் வரிகள்
- வடமொழியும் தென்தமிழும் ஆனவன் காண்.
- (வைத்தீஸ்வரன் கோயில்- புள்ளிருக்கு வேளூர் அப்பர் தேவாரம்)
- மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான்
- மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
- திருஞானசம்பந்தரின் “திருவிருக்குக்குறள்” என்று ஒரு விதமான பதிகங்கள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் இருப்பதைப்போன்ற கருத்திலும், ஒலியிலும் எழுதப்பட்டவை.
- தேர் போன்ற வடிவிலான செய்யுள் அமைப்பு, மாலைமாற்றுப்பதிகம்(Palindrome) போன்ற தமிழில் செய்யுள்களின் சிறப்பை எடுத்துக்காட்டும் பலவற்றுக்கும் நமக்கான நல்ல உதாரணம் சம்பந்தரின் பதிகங்கள்.அவற்றின் செறிவுக்கு ஒரு காரணம் அவர் சிறுவயதிலேயே கற்கவேண்டியவற்றைக்கற்று, தமிழோடு மற்ற மொழிகளிலும் நல்ல தேர்ச்சி அடைந்திருந்தார் என்பது தான்.
எனக்கு இன்னொரு ஏமாற்றம், பஞ்சவன் மாதேவி என்ற ஒரு கதாபாத்திரமே இல்லை. பஞ்சவன் மாதேவிக்கு பள்ளிப்படைக்கோயில் பட்டீஸ்வரத்தில் இருக்கிறது. , ராஜேந்திர சோழனை தன் மகனாய் பாவித்தவர். இவருடைய பள்ளிப்படைக்கோயில் ராஜேந்திர சோழனால் எழுப்பப்பட்டது.
https://veludharan.blogspot.com/2016/10/panchavan-maadevi-pallipadai-ponniyin.html
தனக்கு மகன் வேண்டாம் என்று ஏதோ மருந்தைக்குடித்தவர் என்று அவரைப் பற்றி சொல்கிறார்கள்.
ஹிரண்யகர்ப்பம் என்றால் என்ன?
இது சுந்தரகாண்டத்தில் (கம்பராமாயணத்தில்) வரும் பாடல்.
ஈன்றானை ஈன்ற சுவனத்தனி அண்டம்: ஹிரண்யகர்ப்பம்.
பிரளயக்காலம் வந்து எல்லா உயிர்களும் அழிந்தபிறகு உலகம் எப்படித்தொடங்கும்? தங்கநிறத்தினால் ஆன முட்டையிலிருந்து பிரம்மன் பிறக்கிறான் என்று ரிக் வேதம் சொல்கிறது. ஹிரண்யகர்ப்பர் என்ற சொல் பிரம்மனை குறிக்கும். இந்தியா மட்டுமல்ல, உலகின் பழைய நாகரிகங்கள் (எகிப்து உள்பட), எல்லாருக்கும் இந்த அண்டம் மாதிரியான கருத்துகள் உண்டு.
சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தாலும், ஹிரண்யகர்ப்பம் அந்தணர்களுக்கு எதிராக ஒரு வெறுப்பைக் கிளப்பும் முயற்சியாகத் தோன்றுகிறது.
வருணாசிரமம் சரி என்று வாதாடவில்லை.வெறுப்பை வளர்க்கும் முயற்சிகள் வேண்டாம். திருமுறையில் பாதிக்குப்பாதி பாடல்கள், அந்தணர்களாக வளர்ந்த, சம்பந்தரும் சுந்தரரும் எழுதியவை. நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்துக் கொடுத்தார். அவர் எழுதிய திருவிரட்டை மணிமாலை உள்பட பலவும் பதினோராம் திருமுறையில் அடங்கும்.
சரியான புரிதல் இல்லாமல் எழுதப்பட்ட வரிகள்
- அத்தியாயம் 5:
வடநாட்டுப்பார்ப்பனர்கள் வேதங்கள் சொல்லிப்பூசைகள் செய்யச்ச்சொல்கிறார்கள். நாங்கள் தேவாரமும், திருப்பதிகங்களை ஓதி பூசை செய்கிறோம். எங்களுடைய குரலைக்கேட்டுத்தான் இறைவன் கண் விழிப்பார்.
சிதம்பரம் கோயில்-திருப்பெற்றப்புலியூர், காலத்தால் மிகமிக பழமையானது. தேவாரம் பாடிய மூவரும், மணிவாசகப்பெருமானும் நான்கு வாசல்கள் வழியாக வந்துத்துதித்த பெருமை கொண்டது. தேவாரங்கள் காலத்துக்கு முன்பிருந்தே வழிபாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆலயம்.இந்தப்புதினத்தில் சொல்வது போல மனித உடலின் அமைப்போடு சம்பந்தம் உடையது.
நமக்கு உள்ள சிக்கல் இது தான். வேற்றுமையையும், பிரிவையும் வளர்க்கும் நோக்கத்தில் எழுதுவோம் என்றால், நமக்கு தேவாரத்திற்கு முன்னர் கோயில்களில் தமிழில் என்ன வழிபாடுகள் இருந்தன என்பதற்குச் சான்றுகள் இல்லை.
வடநாட்டு பார்ப்பனர்கள் எட்டுகாலப்பூஜைகளையும் எடுத்துக்கொண்டார்கள் (பக்கம் 65):
கச்சிப்பேடு கடிகை காலத்தால் பழையது. வடமொழியை ஆதிநகர் அரசன் காஞ்சிபுரத்தில் படித்தான் என்று இந்தப்புதினம் குறிப்பிடுகிறது. அம்மன் கோயிலுக்கு காமக்கோட்டம் என்று பெயரிடுங்கள் என்று ராஜேந்திரர் சொன்னதாக ஒரு இடத்தில் வருகிறது. காஞ்சிபுரம் கோயில் தான் காமக்கோட்டம்.காஞ்சிபுரம் காமாட்சி சங்க இலக்கியகாலத்திலிருந்தே இருக்கிறார். வடமொழியும், வடமொழியில் பாண்டித்தியம் உள்ள அந்தணர்கள்/பார்ப்பான்கள் அப்போதிலிருந்தே இருந்திருக்கிறார்கள்.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
இந்தத் திருக்குறளில் கூட பார்ப்பான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- அத்தியாயம் 14:
“எதற்கு வேதம் ஓத வேண்டும்? இறைவனைத் துதிக்கத் தேவாரப்பாடல்கள் இருக்கையில் , வேதமும் மந்திரமும் எதற்கு?” சர்வசிவபண்டிதர்
வீரமாதேவி பாகூர் பள்ளியில் யஜுர் வேதம் மூன்றாண்டுகள் படித்துவிட்டு, தன் கல்வியை எண்ணாயிரத்தில் தொடரப்போராடுகிறாள். அவள் சொல்கிறாள் ” வேண்டுமென்றால், தேவாரப்பாடல்களைச் சொல்கிறேன்”.
யஜுர் வேதத்தில் அவளுக்கு உண்மையில் ஈடுபாடு இருக்கிறதா என்று அறிய அவள் அது வரை மூன்றாண்டுகள் படித்ததைதானே சோதிக்க வேண்டும். ஏன் அவள் தேவாரப்பாடல்களைச் சொல்ல வேண்டும்?
திருக்குறள் மற்றும் தேவாரத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று புரிந்துக்கொள்ளாமல் எழுதுவது எப்படிச் சரியாக இருக்கும்?
அந்த காலகட்டத்தில் பன்மொழிப்புலமை என்பது பரவலான ஒன்றாக இருந்திருக்கிறது.
இன்றைய தமிழ்ச்சமூகம், இணையவழி பின்னூட்டங்களைக் கவனிக்கும் கூட்டமாக இருக்கிறோம். எது அறம், எது மறம் என்ற தெளிவு இல்லை. பண்டிதசோழன் என்று பெருமை கொண்டாடினால் மட்டும் தமிழ் வளர்ந்துவிடுமா?
ஏனோ பக்தியாக இருந்தத்தொண்டர்களை முன்னிறுத்தி, எழுப்பிய தாராசுரம் கோயில் கண் முன்னர் வந்துபோனது. ராஜேந்திர சோழருக்குப்பின்னால் நூற்றி முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் வந்த அரசன். புறக்கணிப்பின் சாயலாக இல்லாமல், தொண்டர்களின் மேன்மையை சொல்லும் சிற்பங்களைப்படைத்து விட்டு போய்விட்டார்.
கங்காபுரத்தின் சிற்பம் சண்டேஸ்வர பிரமாணம் பலருக்கும் தெரியாதத்தகவல். பலரும் அறிந்த/பார்த்த சிற்பத்தைப் பற்றிய தெளிவைக்கொடுத்தார் வெண்ணிலா.
மொத்தத்தில் கங்காபுரம் நல்ல வாசிப்பு அனுபவம். பலவரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய புதினம். ஆனால் உண்மையைச் சரியாக உணர்ந்து கொள்ளாமல் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
இனி வரும்காலங்களில் கங்காபுரம் போன்ற கோயில்கள் அமையுமா என்பது தெரியாது. தமிழர்களுக்கு நம் புராதனக் கோயில்களை நல்லபடியாக பராமரிக்க அவற்றின் மகத்துவத்தைச் சொல்வதே புனைவு எழுதுபவர்கள் செய்யும் சேவையாக அமையலாம். ***

