Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

ஃபுகுதா சியோ-நி: நீல மலர்கள் பூத்த கொடி – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்

தமிழில்: நந்தாகுமாரன்

ஃபுகுதா சியோ-நி (Fukuda Chiyo-ni) – (1703 – 2 அக்டோபர் 1775): ஜப்பானிய எடோ காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹைக்கூ பெண் கவிஞர். அப்போது ஹைக்கூ, ஹொக்கு என்று அழைக்கப்பட்டது … அதன் வடிவமும் சற்று வேறாக இருந்தது. தன் ஏழு வயதிலேயே ஹைக்கூ எழுதத் தொடங்கியவர். பதினேழாவது வயதில் தன் ஹக்கூக்களால் ஜப்பான் முழுக்கப் பிரபலமடைந்தார். பாஷோவை ஆழ்ந்து கற்றாலும் அவர் மாணவியாகத் தன்னை உணர்ந்தாலும் அவரைப் பிரதியெடுக்காமல் ஒரு புதுப்புனலாக ஹைக்கூ உலகில் பிரவேசித்தார். இவர் திருமண வாழ்வு சில வருடங்கள்கூட நீடிக்கவில்லை – கணவர் நோயால் இறந்தார். அவர் பாலகனோ அதற்கு முன்னரே இறந்தான். பின்னர் ஒரு வயதான தம்பதியரைத் தத்தெடுத்து அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அதற்கும் பின்னர் புத்த பிக்குவானார்.


1.

வசந்த கால மழை
பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களும்
அழகானவைகளாக உருமாறுகின்றன.

2.

நானும் பார்த்தேன் நிலாவை
இப்போது இந்த உலகம்
நிஜமாகவே என்னுடையது தான்

3.

நிலாவைப் பார்த்துவிட்டேன்
உலகத்திற்கான என் கடைசிக் கடிதத்தில் கையொப்பம் இடுகிறேன்
தங்கள் அன்புள்ள என்று.

4.

நீல மலர்கள் பூத்த கொடி
கிணற்று வாளியைச் சுற்றிப் பிணைந்து கொண்டு கிடக்கிறது
இப்போது நான் நீருக்கு அண்டை வீட்டாரைத் தான் அணுகவேண்டும்.

5.

ஓடும் நதியின் மேல்
தன் நிழலைத் துரத்திப்
பறக்கிறது ஒரு தட்டான்.

6.

வண்ணத்துப் பூச்சியே
உன் எந்தக் கனவு
உன் சிறகுகளை இப்படிப் படபடக்க வைக்கிறது.

7.

குக்கூ குக்கூ
என்ற சப்தத்தின் கருப்பொருளில் நான் தியானித்திருந்த போது
பொழுது புலர்ந்துவிட்டது.

8.

பெற்றோர்கள் … என்னை விட வயதானவர்கள்
இப்போது என் குழந்தைகள்
அதே சில் வண்டுகள்.

9.

தட்டான் பிடிப்பவனே
இன்றைக்கு எவ்வளவு தூரம் சென்று விட்டாய்*
உன் தேடலில்.**


* தன் பாலகன் இறந்த போது சியோ-நி எழுதியது – அவர் பாலகன் தட்டான் பிடித்து விளையாடுவதில் ஆர்வமுள்ளவன்

** இந்தக் கவிதையின் பாதிப்பில் தான், நான்கு ஹைக்கூ பெருந்தகைகள் என்பவர்களுள் ஒருவராகக் கருதப்படும் கோபயாஷி இஸ்ஸா (Kobayashi Issa), தன் பேதை இறந்தபோது தன் புகழ்பெற்ற இந்தப் பின்வரும் பனித்துளிக் கவிதையை எழுதினார்.

இந்தப் பனித்துளி உலகம்
இது பனித்துளி தான்
எனினும்… எனினும்…

Exit mobile version