Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள் இரண்டு

பயணம்
bird
காடுகள் கழனிகள் தாண்டி மேலெழுகின்றதென் ஆன்மா
இந்தப் பூமியின் அகன்ற வாயில்களை மீண்டுமொருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.
வெள்ளைப்பிடவைக்குள் என்னை மணமூட்டிப் பொதித்து வைத்திருக்கிறார்கள்.
காலங்களையெல்லாம் வென்ற களைப்பில் கண்களிரண்டும் பொத்தியிருக்கின்றன.
ஆன்மாக்களின் உலகிலிருந்து பூமிக்கர்ப்பத்திற்கும்
ஆசைகளின் சடைத்த மரநிழல்களிருந்து அமைதியாய் ஒதுங்கியிருக்கும்
மண்ணறை உலகத்திற்குமாய்
வாழ்க்கையெனும் நீள்காதை  பயணங்களின் முடிவற்றதோர் தொகுப்புத் தான்.
தளையறுந்த விடுதலையின் சங்கீதம் தான் எவ்வளவு மதுரமாயிருக்கிறது
நான் நடந்த பாதைகள், குடியிருந்த நூற்சுரங்கம், வீட்டறைகள்,
உறவுவேர்களின் பிணைப்புக்கள், எழுத்துகள்,  நட்ட செடிகொடிகள்
எல்லாவற்றையும் சூன்யமாக்கி விட்டிருந்தது ஆன்மாவின் பயணம்.
சாம்பிராணிப்புகையும் அத்தரும் கலந்ததோர் அமானுஷ்ய வாசம் மெல்லிதாய் பரவுகிறது.
விட்டுச் செல்லும் பழங்குடை  உடைந்த பேனாவின் மூடி பற்றியதான கவலைகளோ சடைப்போ பயணிக்கு இல்லை.
இஸ்ராயீலின் சிறகுகள் என் மேல் மிக மெதுவாகக் கவிழ்ந்த
அந்த ஒரு விநாடியில்
உலகம் பற்றிய மாய பிம்பம் உடைந்து சிதறி விட்டது.
ஆறடிக் குழிக்குள் அடங்கப் போகிறாய் என்று அச்சமூட்டியவர்கள்
ஆன்மாவின் நெடும் பயணம் பற்றிய அறிவற்றவர்கள்
எல்லையற்று விரிந்தோடும் வாழ்தலின் வெளி
மேலே நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானம்
பயணம் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.
என் சந்தூக்கை தூக்குகிறார்கள்.
நான் இன்னும் மேலெழுகிறேன்என் சந்தோஷங்களின் அதீத உடைப்புக்களில்
ஆன்மா ஆயிரம் துகள்களாய் வெடித்துச் சிதறி விடுமோவென்றோர் அச்சம் துளிர்க்கிறது.
என்னைப் படைத்தவன் பற்றிய சந்திப்புக் கற்பனைகள்
புதுமணப் பெண்ணின் நாணங்களையும் படபடப்புக்களையும் மிகைக்கின்றன.
என்னுடல் கப்றுக்குள் இறக்கப்படுகின்றது.
மிக மென்மையாக பிடி மண்ணை அள்ளித் தூவுகிறார்கள்.

நான் இன்னும் மேலெழுகிறேன்
-சமீலா யூசுப் அலி

***    ***

கல்லறை வாசகம் 
அரசு நுழைவுத் தேர்வில்
அவசரநிலை பிரகடன வருட  கேள்விக்கு
பதில் சொல்லியாயிற்று
கோயில் குளமெல்லாம் சுற்றி
கற்சிலையை காவல்துறையென
காப்பாற்று காப்பாற்று என
சில்லறை போட்டாயிற்று
அதிகாரம் வடியும் இடங்களில்
பணம் உறைந்த இடங்களில்
பெண்கள் நிறையும் இடங்களில்
செயல் உளி கொண்டு என்னை
நொறுக்கி நொறுக்கி
செதுக்கி செதுக்கி
உள்ளே கிடக்கும் மிருகத்தை
காட்சிப்படுத்தியாயிற்று
வார்த்தைகளை கொறிக்கும்
பழக்கம் போன பாடில்லை
அடிமைத்தளையை அறுத்தபாடில்லை
இன்னும்
பிறப்பை போலப் பசுமையான சாவை கண்ட பாடில்லை
மனம் இருக்கிறது மழையில் நனைய
மழையைக் காணவில்லை
மழை இருக்கிறது
மனதை காணவில்லை
எனக்குச் சிக்கும் நான்
மீன் முள்ளைப் போல
பதில்தான் தெரிந்தபாடில்லை
நான் யார் ?

நேதாஜிதாசன்
 

Exit mobile version