Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

கவிதைகள்

தேய்ந்து கிடக்கிறது பூமி
காலடித்தடங்களால்.
கால்கள் ஊர்ந்து
துகள்களாய்
பெரும் பாறைகள்.
இலக்கில்லாப் பயணங்கள் ,
குறுகியும் நெடிந்தும்
பாதைகள் .
ஓரடிக்கொரு
பார்த்தன் புத்தன்
சித்தன் கர்த்தன்
லிபிகள் நசிந்த
புராதன பதாகைகள்
எதிரெதிர் திசை காட்டி.
வழி மறந்து
பெருங்கூட்டம்
மைற்கற்களின் முன்.
முடித்தவர் குறை
பதித்த சுமைதாங்கி .
பாதைகள்
பயணங்கள்
பதாகைகள்
இல்லை நான்,
சாட்சி
சாலையோர மரத்தின்
நிழல்.
களைத்திருக்கிறாய்!

ஜீவா. கே.

oOo

களபலி

இப்படியாகத்தான் நிகழ்த்தப்படுகிறது
உறவின் முறிப்பு
காதல் விளையாட்டில் கண்ணைக் கட்டி
மண்டியிட வைக்கப்பட்ட பின்
இதயத்தில் வாளைப் பாய்ச்சித்
துடிப்படங்கும்முன்
தலையைக் கொய்வதைப் போல்
கொஞ்சிக் கொஞ்சி அழைத்துச் சென்று
எல்லோரும் பார்க்கும்படி
கன்னத்தில் முத்தமிட்டு
குறிவைத்துக் காத்திருக்கும் எதிரிக்குக்
காட்டிக் கொடுப்பதைப் போல்
காதலால் வளரும் சிசுவைக்
காரணம் ஏதேதோ சொல்லிக்
கருவறுத்து விட்ட பின்
தலைமறைவாவதைப் போல்
மிழற்றும் மழலையைத் தோளோடு அணைத்துத் தூக்கி
பலனேதோ வேண்டி பலிபீடத்தில் வைத்து
ஆண்டவன் கைகளில் தெறிக்கும் செந்நிறம் கண்டு
அகமகிழும் பக்தனைப்போல்
தான் நிகழ்த்தப்படுகிறது
உறவின் முறிப்பு.

oOo

புனரபி ஜனனம்

தூய ஆற்றைத் தேடி
அலைந்த துளி
தகிக்கும் தார் சாலையில்
விழுந்து
ஆவியாகிறது

oOo

வாழ்க்கை 24 x 7

ஆண்டாளுக்கு இரவுப்பணி
சேனல் மாற்றி மாற்றி
கண்ணில் படும் பெண்ணெல்லாம் அவளாய்த் தெரிய
கண் எரிச்சலில் உறங்கிப்போகிறான் கண்ணன்
இரவுக் காவலாளி ஈஸ்வரன்
அலைபேசியில் கங்கையோடு சங்கமிக்கும்போது
அணைந்தணைந்து எரிகின்றன
சில அறைகளின் விளக்குகள்
”நேத்து ராத்திரி யம்மா
தூக்கம் போச்சுடி யம்மா”
கேட்டபடி படுத்திருக்கும்
காரோட்டி கர்ணனுக்குக் கவசமில்லை
காதுகளில் இயர்ஃபோன் குண்டலங்கள் உண்டு
பகலுக்கும் இரவுக்கும் ஆயிரம் கண்கள்
சுழலும் அவற்றைத் தவிர்த்த
கேம்ப்பஸ் சாலையோரம் இரு சைக்கிள்கள் நிற்கின்றன
ஓட்டிகள் நிற்கவில்லை
பின்னிரவிலும் ஜிம்மில்
பீமனாக முயல்கின்றார் சிலர்
விழிக்கும் சூரியனுக்கும் லேசான குழப்பம்
தான் நிலவோ என்று.
பா.சரவணன்

Exit mobile version