Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

மகரந்தம்

வில்லியம் வீவர்: அஞ்சலி
William Weaver.

உம்பர்த்தோ ஈகோவையும் இட்டாலோ கால்வினோவையும் இத்தாலியில் இருந்து ஆங்கிலத்திற்கு அழைத்து வந்தவர் மறைந்து விட்டார். அவருக்கு வயது தொண்ணூறு. தட்டச்சத் தெரிந்தவர் எல்லாம் மொழிமாற்றுபவர் என்று இயங்கி வந்த காலத்தை மாற்றி இலக்கிய அனுபவமும் சொற்செறிவும் கொண்ட மொழியாக்கங்களை கொடுப்பவர் மொழிபெயர்ப்பாளர் என்னும் நிலைக்கு உயர்த்தியவராக வில்லியமைக் கொண்டாடுகிறார்கள். தன்னுடைய அசல் புத்தகத்தை விட மொழிபெயர்ப்பு சிறப்பாக இருந்தததாக உம்பர்ட்டோ ஈக்கோ புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பில் உள்ள சிரமங்களைப் பகிர்கையில் ’பெரிய வார்த்தைகளையும் கடினமான சொற்றொடர்களையும் ஆங்கிலத்தில் கொணர்வது பிரச்சினையேயில்லை. எளிமையான “buon giorno”வை எப்படி சொல்லுவது? ”உங்கள் நாள் நல்ல நாளாக அமையட்டும்” என்று சொன்னால் துருத்திக் கொண்டு நிற்கிறதே!’ என்கிறார். அதே போல் மூல மொழியின் சுடுசொற்களைப் போல் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளுக்கான வளம் இல்லாததும் குறையாக உணர்ந்திருக்கிறார். இருபத்தைந்து வயதிற்குப் பிறகுதான் இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டு மொழிபெயர்ப்பில் ஆர்வம் செலுத்தத் துவங்கியிருக்கிறார்.

http://www.theguardian.com/books/2013/nov/18/william-weaver

oOo

அமெரிக்காவின் பெண்டகன்: ஆராய்ச்சி

இப்படி ஒரு துறை அரசின் முக்கியத் துறையாக இருந்தால் அந்த நாடு உருப்படுமா? அந்த மக்களின் எதிர்காலம்தான் நன்றாக இருக்குமா? இந்த லக்ஷணத்தில் இந்தத் துறையை நம்பி அந்த மக்கள் மேன்மேலும் பணத்தைக் கொட்டி அதிடம் கொடுக்கிறார்கள். கேட்கிற போதெல்லாம் ஒரு அரசுத் துறைக்கு, கேட்பதற்கும் மேல் பணம் வந்து கொட்டினால், அதையும் எப்படி எதற்குச் செலவழிக்கிறார்கள், அது ஏன் அவசியம், அதை மேலும் சிக்கனமாகச் செய்ய முடியாதா என்று ஒரு கேள்வியும் கேட்கப்படாமல் விட்டால்,  எப்படி அந்தத் துறைக்குத் தனக்குக் கிட்டும் நிதி மீது சிறிதும் மதிப்போ, கவனமோ இருக்கும்?

8.5 ட்ரில்லியன் டாலர்களைச் செலவழித்த இந்தத் துறை எத்தனையாயிரம் நபர்களைக் கொன்றது என்று யோசித்தால் தெரியும் எத்தனை இதன் கொடூரம் பன்மடங்கு பயங்கரமானது என்று.

http://www.reuters.com/investigates/pentagon/#article/part2

oOo

வீர சைவம்: செய்தி

இதென்ன திருப்பம்? ஒரு ராணுவமே எப்படி மரக்கறி உணவை நம்பி நடத்தப்பட முடியும்? உலர்ந்த மாமிசம் என்பது ராணுவங்களில், குறிப்பாக மேலை ராணுவங்களில் அடிப்படை உணவு, அல்லது தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட மாமிசம் அப்படிப்பட்ட அடிப்படை உணவு என்றுதானே இத்தனை காலமாக இருந்தது. நார்வேயின் ராணுவம் இப்போது மரக்கறி உணவைத் தன் படையாட்களுக்குக் கொடுக்கப் போகிறதென்றால் அதன் செயல்முறைகள் என்ன்? இந்தக் கட்டுரை அப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கப்பட்டது என்று விளக்குகிறது.

வாரத்தில் ஒரு நாள்தான் என்றாலும் அது நாட்டிலேயே இருக்கும், போரில் இல்லாத படையாட்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான் கேள்வி.

http://goo.gl/bGqz2i

oOo

மருத்துவ சுற்றுலா: அலசல்

உலகம் பூராவும் அதே பிரச்சினை. இடைத் தரகர்கள், பேராசை பிடித்த மருத்துவர்கள், மருத்துவ மனைகள்- வியாதிகளைத் தீர்க்கும் மொத்த மருத்துவத் துறையுமே இன்று மனிதர்களை வாட்டி வதைக்கும் ஒரு அமைப்பாக மாறிக் கொண்டு வருகிறது. ஒரு புறம் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், பாதி வியாதியைத் தீர்த்தபின் பாதிப் புது வியாதிகளைக் கொண்டு வரும் மருந்துகளைச் சந்தையில் உலவ விடுகின்றன. இன்னொரு புறம் பல ஆண்டுகளாக ஓரளவு நிவாரணம் கொடுத்த மருந்துகளை இரண்டாம் நிலை நிறுவனங்களிடம் கொடுத்து அவை தரம் கெட்ட முறையில் தயாரிப்பதைக் கேள்வி கேட்காமல் விடுகின்றன. அல்லது விற்காது திரும்பிய மருந்துகளை மறு முத்திரையிட்டு, அவை காலாவதி ஆனவை என்பதை மறைத்து மறுபடி சந்தைக்கு அனுப்புகின்றன. அல்லது பெரும் பணக்காரர்கள் மட்டுமே விலை கொடுத்து வாங்கக் கூடியவையாக மருந்து விலைகளை நிறுவுகின்றன.

அதே போல மருத்துவமனைகள் தம் கதவு தாண்டி நுழைவோரிடம் எப்படி பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை, ஏன், லட்சக்கணக்கான ரூபாய்களைப் பறிப்பது என்று திட்டம் போட்டே இயங்குவதாகவும் தெரிகிறது. இது ஏதோ இந்தியாவின் நோய்க் கூறான மருத்துவ அமைப்பு என்று எண்ண வேண்டாம். இன்று அமெரிக்க அரசியல் ஸ்தம்பிப்புக்குக் காரணம் இந்த மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சியும், அந்தக் கட்டுப்பாட்டை நடக்கவிடாமல் செய்யும் எதிர்க் கட்சியும்தான். யூரோப்பில் ஓரளவு சமூக மருத்துவ சிகிச்சை என்று கிட்டிக் கொண்டிருந்தது. இப்போது அதற்கும் ஆபத்து வந்திருப்பதாகத் தெரிகிறது. ஜெர்மனியிலும் மருத்துவர்கள் பேராசை பிடித்து அலைகிறார்கள், மருத்துவ மனைகள் வெளிநாட்டிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என்று வரும் நோயாளிகளைப் பலியாக ஆக்குகிறார்கள் என்று சொல்கிறது இந்த ஜெர்மன் செய்தி அறிக்கை.

http://www.spiegel.de/international/germany/german-health-care-system-cashes-in-on-foreign-patients-a-933517.html

oOo

சிறுவர்களிடம் புற்றுநோய் விகிதம் பன்மடங்கு வளர்ச்சி ஏன்? புலனாய்வு

இத்தாலியின் இந்தப் பகுதியில் திடீரென்று புற்றுநோய் விகிதம் ஏற ஆரம்பித்திருக்கிறது. ஒரு சதவிகிதம்… இரண்டு சதவிகிதம் அல்ல… 600%

ஆறு மடங்காக உயர்ந்திருக்கிறது. பத்தாண்டுகள் முன்பு வரை பெரியவர்களுக்கான சாதாரண புற்றுநோய் சோதனைச்சாலை கூட இல்லாத குக்கிராமங்களின் சின்னச் சின்ன மருத்துவமனைகளில் கூட குழந்தைகளுக்கான இரத்தப்புற்றுநோய் சிகிச்சைக் கூடங்களைத் துவக்குகிறார்கள். மூளைக் கட்டி நீக்குவதற்கான சிறப்பு மையங்கள், கதிர் இயக்கம் தருவதற்கான உபகரணங்கள், வேதிச்சிகிச்சை (கீமோதெரபி) கொடுக்கும் இடங்கள் எல்லாம் நிரம்பி வழிகிறது எப்படி?

நச்சுப்பொருள்களையும் இரசயானங்களையும் முறையே சுற்றுச்சூழல் விதிகளின்படி கழிக்காமல், அப்படியே தூரக் கொட்டுவதன் விளைவு. இங்கே வெசூவியஸ் எரிமலை கனன்று கொண்டிருக்கிறது. அதை சாக்காக வைத்து அதன் அருகிலேயே குப்பை கூளங்களைப் போட்டு வைக்கிறார்கள். தற்போதைக்கு தண்ணிரிலும் மண்ணிலும் கலந்து உள்ளூரை நாசம் செய்யும் நஞ்சு, எரிமலை வெடித்தால், அக்கம்பக்க நாடுகளுக்கும் செல்லும்.

http://www.thedailybeast.com/articles/2013/11/21/italy-s-triangle-of-death-naples-residents-blame-child-cancer-rates-on-mob-disposal-of-toxic-chemicals.html

oOo

தனியார் சிறைச்சாலைகள்: அரசு இரகசியங்கள்

சிறைக்கைதிகள் விமானத்தைக் கடத்துவதாக ’கான் – ஏர்’ படம் வந்தது. நிஜத்தில் சிறைக்கைதிகளை மாநிலங்கள்தான் நாடு கடத்துகின்றன. ஹவாயில் செய்த குற்றத்திற்கு அரிசோனாவில் அடைக்கப்படுகிறார்கள். பக்கத்து ஊர் ஜெயிலில் இருந்தாலாவது அப்பா, அம்மாவை பார்க்கலாம். அவர்களின் பாசத்தை உணர்ந்து திருந்தி வாழ ஆசை கொள்ளலாம். ஆனால், முப்பத்தாறு மணி நேர தூரத்திற்கு அப்பால் சென்றுவிட்டால் சொந்த பந்தத்தைப் பார்க்காமல், மனம் இன்னும் இறுகும் நிலைக்குத் தள்ளப்படுவதை எடுத்துரைக்கும் கட்டுரை.

http://goo.gl/X8FNdp

Exit mobile version