Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

இரு கவிதைகள் – லாவண்யா

சொன்னதும் சொல்லாததும்

கனவு காணுங்கள்
கனவுகளே வாழ்க்கை
வாழ்க்கையே கனவு
கனவு காணுங்கள்
வறுமைக்கோடு
வானவில்லானதுபோல்
கனவு காணுங்கள்
பெண்டு பிள்ளைகளோடு
பென்ஸ்காரில் போவதுபோல்
கனவு காணுங்கள்
புலர்காலைப் பொழுதொன்றில்
பொன்கட்டிமழை பெய்வதாய்
கனவு காணுங்கள்
நிற்கும்போதும் நடக்கும்போதும்
உண்ணும்போதும் உழைக்கும்போதும்
கனவு காணுங்கள்
பகலிரவு பாராமல்
கனவு காணுங்கள்
கனவில் நிகழும் கனவிலும்
கனவு காணுங்கள்
கனவு கண்டபடியிருங்கள்
கஜானாவை நாங்கள்
களவாடத் தோதாய் கனவு கண்டு கொண்டேயிருங்கள்

oOo

கவர்னர் மாலை

காலையில் கதவு திறந்ததும்
கள்மணக்க என் எதிரே நின்றீர்
வக்கணையாய் வணக்கம் சொன்னீர்
என்னவேண்டுமெனக் கேட்டால்
வந்தவேலையைச் சொல்லாமல்
கல்லுப்பட்டி கமலவேணிக்கு
கவர்னர் மாலை வாங்கித்தந்த
கள்ளக்காதல் கதையைச் சொல்கிறீர்
பண்ம் செலுத்தவந்தீரா செலவுக்கு
பணமெடுக்க வந்தீராவெனக் கேட்டால்
பணத்தை எங்கேதேடுவேனென்று
பலத்த குரலில் பாடுகின்றீர்
மத்தியமந்திரி மகிமைராஜனுக்கு
மைத்துனரென்று மார்தட்டுகிறீர்
மொட்டைக் கடுதாசி போடுவதில்
மன்னனென்று தொடைதட்டுகிறீர்
இதற்கெல்லாம் பயந்துபோனால்
இந்த நாற்காலியில் உட்காரமுடியாது
இனியும் அலம்பல் செய்தால்
மரியாதை கெட்டுப்போகும்
மலையேறிய பிறகு வாரும்
பொறுமை ஐயா பொறுமை
கால்காணியில் கரும்புநட்டேன்
பூத்துப்போச்சு
கால்காணியில் கடலைபோட்டேன்
கரியாய் போச்சு
மழையில்லை மடியில் கனமில்லை
மகன்கள் சுகமில்லை கையில் பணமில்லை
கள்குடிக்கக் கூடக் காசில்லை
மகராசன் நீங்கள் மனது வையுங்கள்
தள்ளுபடி செய்யும் கடன் ஒன்று தாருங்கள்
o0o

Exit mobile version