Site icon சொல்வனம் | இதழ் 369 | 28 ஜூன் 2026

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – காஃபி

(இணையத்திற்குள் ஆறு பேர் நுழைகிறார்கள். அப்பொழுது விதூஷகன் டிவிட்டர் கருத்து போல் இரண்டு வரிகளில் எழுதுகிறான்)

அக்காலத்தில் காபி கடை பெஞ்சில் இலவசமாக தினசரி படித்தார்கள். இன்றும் அதே காபி கடையில் அமர்ந்து இலவசமாக இணையத்தில் செய்தி வாசிக்கிறாங்க.
(ட்விட்டை படித்தாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது இன்னொரு திரியில் ஜேம்ஸ் கேட்கிறான்.)
ஜேம்ஸ் : வாங்க தேவந்தி…எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கிங்க?

தேவந்தி : ஜேம்ஸ், இதைப்பற்றித்தான் இன்று காலை யோசித்துக் கொண்டிருந்தேன்ஒரு முப்பது வருடங்களுக்கு முன்பு வரை, வெளிநாடு போய் வந்தவர்களிடம் ‘என்ன வாங்கினீர்கள்’ என்றுதான் கேட்பார்கள். யாராவது சிலர்தான் என்ன பார்த்தீர்கள் என்று கேட்பார்கள். போய் வந்தவர்கள் கேமே (Camay) சோப் கொடுத்தால்கூட சந்தோஷப்படுவோம்

90களில் வெளிநாடு போகும்போது ‘என்ன வாங்கிவரவேண்டும்’ என்று கேட்டால் ‘ஐயோ எல்லாம் இங்கேயே கிடைக்கிறதே. எதற்கு அங்கிருந்து’ என்பார்கள்.

இப்போ கேட்டால் ‘ஆமாம் அங்கிருந்து மேட் இன் சைனா’ பொருட்களை வாங்கி வருவேண்டுமாக்கும்’ என்கிறார்கள்.

ஒரு டாலர் = 63 ரூபாய், தெரியும்தானே. என்ன ஷாப்பிங் செய்ய?

ஜேம்ஸ் : உண்மைதான். 97ல் மலேஷியாவிலிருந்து திரும்பியபோது அறை நண்பர்களுக்கு என்ன வாங்கிவந்தேன் என்று நினைக்கிறீர்கள் – டியோ ஸ்ப்ரேக்கள்!

என் மனைவி எப்போதுமே வாங்கி வரச்செல்வது, கறை நீக்கிகள்.

மேலும் அம்மாவிற்கு தேயிலையும் காபி தூள்களும் – அஸ்ஸாம், இலங்கை, கொலம்பியா தயாரிப்புகள்தான், ஆனால் எல்லா முதல் தரங்களும் முதலாளி நாடுகளுக்கு வந்துவிடுகின்றன, நம்ம ஊரில் கிடைப்பதில்லை…

தேவந்தி : காப்பித்தூள் இங்கிலாந்திலிருந்தா? ஓ கொலம்பியா காப்பியா? அதெல்லாம் நம்மூர் பில்டருக்கு சரிப்படுமா?

டீ பற்றிச் சொல்லி ஏன் என் வயிற்றெரிச்சலைக்கொட்டுகிறிர்கள்! அமெரிக்காவில் சூபர்மார்க்கெட்டுகளில் 50 வகை டீ இருக்கிறது – எல்லா வகை பூ, பழம், மருந்துச் செடிகள், நறுமணச் செடி இலைகள் என்று ஒன்றையும் விட்டுவைக்காமல் டீத்தூள் செய்துவிடுகிறார்கள். அதெல்லாம் ஸ்டைலாய் சாப்பாடுடன் கம்பெனியுடன் சாப்பிட சரிப்படும். காலை எழுந்ததும் நம்ம சிஸ்டம் நமக்குப் பழகிய கஃபெய்ன் நிரம்பிய, சக்கரை பாலுடனான டீ கேட்கிறதே. இல்லையென்றால் மூடைக் கெடுப்பேன் என்கிறது.

நான் வெறுமே நம்மூர் ப்ளாக் டீ -ப்ரூக் பாண்ட் ரெட் லேபலில் வருமே அதுவோ அல்லது டெட்லி மசாலாவோ கடை கடையாய் ஏறித் தேடித் தேடி இளைத்தேன் போங்கள். கடைசியாய் ஒரு கடையில் இந்தியன் டீ என்று கண்டு பிடித்தால் அதில் 200 பாக்கெட் இருந்தது. அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

அடுத்தமுறை அமெரிக்கப் பயணம் என்றால் முதலில் ஒரு பெரிய பாக்கெட் டெட்லி மசாலா வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று டயரியில் எழுதி வைத்திருக்கிறேன்.

என்னதான் ஸ்டார்பக்ஸிலும் சியாட்டில்ஸ் பெஸ்ட் காஃபியிலும் உயர்ந்த வகை காப்பிகள் கிடைத்தாலும் நம்ம ஊர் மக்கள் அங்கேயும் போய் பேஷ் பேஷ் நரசூஸ் சுவையைத்தானே தேடுகிறார்கள்! போன மாதம் கணவர் அமெரிக்காவில் மகன் வீட்டுக்குப் போகையில் கேட்டார்: ‘அங்கு டீஸண்ட் காப்பி கிடைக்குமா? நான் வேண்டுமானால் ஒரு அரைக்கிலோ கோத்தாஸ் கொண்டுவரட்டுமா?’ என்று. பையன் சொன்னான்: one of my friends- a Chennai coffee lover has experimented with the coffee available here and discovered that a combination of Ethiopian Sidamo and Sumatra coffee (1:1)from Starbucks ground to a fine blend (“Turkish” grind for electric filter) tastes exactly like the coffee you get in Chennai.’

சொர்க்கமே என்றாலும் அங்கேயும் போய் ஷ்ட்ராங் ஃபில்டர் காப்பி கேட்பார்கள் நம் மக்கள். நான் மட்டும் தனியாய் நின்றுகொண்டு டீ கேட்பேன்.

(இப்பொழுது இணையத்தில் பின்னிரவின் கருநீல ஒளி. சினிமாவில் சொர்க்கத்தைக் காட்டும்போது வெள்ளை மேகங்கள் தவழ்வது போல் தரையே தெரியாமல் போகிறது. நள்ளிரவு சுவர்க்கோழி சப்தம் ஆந்தையின் ஒலி. திடீரென்று பூதம் வருகிறது.)

பூதம் : காஃபி என்றால் வீட்டிலோ, அல்லது சில ஆர்கானிக் காஃபி விற்கும் கடைகளிலோதான் நல்லதாகக் கிட்டும். வெளிக் காஃபி கடைகளில் அனேகமாக மிகச் சுமாராகத்தான் கிட்டும். சில சமயம் அங்கும் நல்ல காஃபி கிட்டும், அது தற்செயல் நிகழ்வு.

தேவந்தியின் பையன் சொன்னதுபோல சில வகைக் காப்பிக் கொட்டைகளை வாங்கி கலந்து வீட்டில் அரைத்தால் நல்ல காப்பி கிட்டும். கடைகளிலேயே அரைக்க வேண்டுமானால், அந்த எந்திரத்தில் டர்கிஷ் க்ரைண்டையும் தாண்டி ஒரு சிறு பிராக்கெட்டில் அரைக்கும் தேர்வு உண்டு. அந்தத் தேர்வை அரைக்கும் தேர்வாக ஆக்கினால் கடை எந்திரங்கள் நம் ஊர் அரைப்புக்குக் கிட்டத் தட்ட சன்னமாக அரைக்கும். அதுதான் நான் பயன்படுத்துவது. எலெக்ட்ரிக் காஃபி ஃபில்டர் எல்லாம் பயங்கரமான காஃபிதான் தரும்- தண்ணிக் காஃபி.

 

நான் சாதாரண தமிழ்நாட்டு/ கர்நாடகா மாநிலத்தில் பயன்படும் உலோக ஃபில்டர்தான் கடந்த 29 வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். மேற்படி அரைவை பொடிகள் அதில் நல்ல காஃபியைக் கொடுக்கின்றன. காப்பிக் கொட்டைக் கலவையில் நான் ஒரே வகைக் கலவையைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு ஸீஸனிலும் விளையும் காஃபிக் கொட்டை ஒரு மாதிரி இருக்கும். அதை எப்போது ‘அறுவடை’ செய்கிறார்கள் அல்லது செடியிலிருந்து பறிக்கிறார்கள், எத்தனை நாள் காய வைக்கிறார்கள், அப்புறம் எப்போது கப்பலிலிருந்து இறக்கி எடுத்து வறுக்கிறார்கள் போன்றன அதன் ருசியை நிச்சயம் பாதிக்கும். ஒரே வகைக் காப்பிக் கொட்டையே ஒரு வருடத்தில் பற்பல சுவைகளோடும், டிகாக்‌ஷன் பல வகை அடர்த்தியோடும் இறங்கும். எனவே ஹிட் அண்ட் மிஸ் போல நான் பலவகைக் கொட்டைகளின் கலவைகளைப் பரிசோதனை முயற்சியாகச் செய்து பார்க்கிறேன்.

கொலம்பியன் சுப்ரீமோ என்ற வகை அல்லது கொலம்பியக் காஃபிக் கொட்டைகளை ஒரு மினிமல் அடித்தளமாக வைத்துக் கொண்டு சுமத்ரா அல்லது எதியோப்பியா, கென்யா என்று வெவ்வேறு நாட்டுக் காஃபியைக் கலந்து பார்ப்பேன். இதில் என்ன விதமாக வறுக்கப்பட்டிருக்கிறது என்பதும் ஒரு ஃபாக்டர்.

அனைத்தும் dark roast ஆக இருப்பது உதவாது. அனைத்தும் mild roast or blonde roast உதவாது. நம் ருசிக்குத் தக்கபடி கருக்கப்பட்ட வறுப்பு, மித வறுப்பு, இலேசான வறுப்பு ஆகியவற்றைக் கலக்க வேண்டி இருக்கும். அப்புறம் எதியோப்பியக் காஃபியிலும் உருண்டைக் கொட்டை, அரை உருண்டைக் கொட்டை (pea-berry, arabica ) ஆகியன சில சமயம் கிட்டும். என் அனுபவத்தில் இந்தியாவின் மைசூர் கொட்டைகள் கடைசி 30% தரத்தில்தான் உள்ளவை. ஆனால் ஒரே நாட்டின் காஃபியே ஒவ்வொரு ஸீஸனில் ஒரு தரத்தில் கிட்டுகிறது.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாகக் காஃபி உலகமெங்கிலும் இருந்து கிட்டுவதே தரம் குறைந்துதான் போயிருக்கிறது. அனேகக் கொட்டைகள் அடர்வு இல்லாத சாறைத்தான் கொடுக்கின்றன.
டீயைப் பொறுத்தவரை இப்போது இங்கு கென்யா, சிலோன், இந்தியா தவிர வேறு சில நாடுகளில் இருந்தும் தேயிலை கிட்ட ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் டார்ஜிலீங் அல்லது அரைச் சுருள் தேயிலை எளிதாக எல்லா இந்திய மளிகைக் கடைகளிலும் கிட்டும். ஸியாட்டில் நகரில் நிச்சயம் நிறைய இந்திய மளிகைக் கடைகள் இருக்கும். அவை அனைத்திலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதே வகை தேயிலை கிட்டும். அமெரிக்கக் கடையில் போய் இந்தியத் தேயிலை தேடினால் எப்படிக் கிட்டும்?
ஜேம்ஸ் : ‘ப்ரூ’ இன்ஸ்டன்ட் கூட ஸ்ரீரங்கத்தை விட சிங்கப்பூரில் மிக நன்றாக இருக்கின்றது. ஏற்றுமதிக்கு வேறு தரத்தில், சுவையில் அனுப்புகிறார்கள். முன்பு கால்கேட் பற்பசையிலும் இதே வித்தியாசத்தை கவனித்து இருக்கிறேன். இந்தியர்களுக்கு இது போதும் என்று வெளிநாட்டினர் மட்டுமல்ல, இந்தியர்களும் நினைப்பதுதான் காரணம்.

 

பேராசிரியர் கேசவன் : இரண்டு ஜாடிகளையும் அருகருகே வைத்து ஒரே வகைப் பாலில் சேர்த்துக் குடித்துப் பார்த்தால் இந்த வேறுபாடு தெரிகிறதா என்று சோதிக்கலாம். சிங்கப்பூரில் நம் ஊரில் கிடைப்பதை விட மேலான பால் கிடைக்கிறதோ என்னவோ? அல்லது அங்கு தண்ணீர் மேலாக இருக்கலாம்.பற்பசையில் நான் கவனித்தது, இந்தியப் பசைகளில் சுரீர் என்ற குளிர்ச்சி உணர்வு குறைவு- மெந்தாலைக் குறைக்கிறார்களோ என்னவோ. தினம் ஆல்கஹாலை ருசிக்கும் பழக்கம் அனேக மேலையருக்கும், சிங்கப்பூர் வாசிகளுக்கும் இருக்கலாம். அதனால் நாக்கு கொஞ்சம் மந்தித்துப் போக வாய்ப்பு அவர்களுக்கு அதிகம். அந்த நாக்குக்கும், வாய்க்கும், காட்டம் அதிகமாக உள்ள பற்பசை தேவைப்படலாம். அது நிச்சயம் அமெரிக்கர்களுக்கு இருக்கிறது. லிஸ்டரீன் என்ற வாய் கழுவும் திரவம், இங்கு என் போன்றவர்கள் பயன்படுத்தினால் வாயிலிருக்கும் திசுக்களை எல்லாம் பிய்த்து விடும் போல உணர்வு இருக்கும். சமீபத்தில் அமெரிக்கர்களே கூட அப்படி ஒரு ஆல்கஹால் அதிகமான வாய்க் கழுவியை விரும்புவதை நிறுத்தி, மென்மையான திரவங்களைப் பயன்படுத்தத் துவங்கி இருப்பதால் லிஸ்டரீன் நிறுவனம் அந்தத் திரவத்தில் ஆல்கஹால் இல்லாத வகையைத் தயாரிக்கிறது.
அதே நேரம் பற்பசைகளில் இன்னும் சுரீர் உணர்வு அத்தனை குறையக் காணோம்.காப்பியே மேற்கில் கசப்பு கூடுதலாக இருக்க ஒரு காரணம், அவர்கள் இப்படி ஆல்கஹாலின் கசப்புக்குப் பழகிய நாக்குக்கு காப்பிக் கசப்பு ஒன்றும் பெரிய விஷயமில்லாததாக இருக்கும். இந்தியர்களில் ஒரு கணிசமான பகுதியினர் ஆல்கஹால் அருந்துவதில்லை என்பதால் காப்பி அத்தனை கசப்பாக இருக்கத் தேவை இல்லை.தவிர கசப்புக்கும் கஃபைன் அளவுக்கும் ஒன்றும் தொடர்பு அதிகமில்லை. கருக வறுக்கப்பட்ட ஃப்ரெஞ்சு ரோஸ்ட் காஃபி இருப்பதில் கசப்பானது- அதே போல வியன்னா ரோஸ்ட், இதாலியன் ரோஸ்ட் ஆகியனவும் கறுப்பு வறுப்பு. அவை எல்லாம் சற்றேறக் குறைய ஒருப்போல கசப்புக் காஃபி கொடுப்பவை. மாறாக கொலம்பியா, ஆஃப்ரிக்கா வகை வறுப்புகள் நடுவாந்திரமானவை- பழுப்பு நிறத்தில், தங்க நிறத்தில் வறுபடுபவை. இவை அரபுக் காஃபி என்றும் சொல்லப்படலாம். இவற்றை எல்லாம் விட மிக இலேசான பழுப்பில் ஒரு வறுப்பு வகை உண்டு. அதை இப்போது மைல்ட் என்றும் வணிக உத்திக்காக ‘blonde’ என்றும் சொல்கிறார்கள். ஸ்டார்பக்ஸ் இப்படி ஒரு வகையைக் கொஞ்ச காலம் விற்றுப் பார்த்தது.

இதில் நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் – கருப்பு வறுப்பு உள்ள காஃபிக் கொட்டைகள் கசப்பான கஷாயத்தைக் கொடுத்தாலும், அவற்றில் உள்ள காஃபைன் அத்தனை அதிகம் இல்லை. நிறையக் குடித்தால்தான் அதிர்ச்சி தருமளவு இருக்கும். அல்லது பால் கலக்காமல் நேரே குடிக்க வேண்டி இருக்கும். அதனால்தான் ஃப்ரெஞ்சு, இதாலியன், வியன்னா ரோஸ்ட் காஃபி குடிப்பவர்கள், எஸ்ப்ரஸ்ஸோ, டர்கிஷ், அல்லது கடுங்காஃபியாகக் குடிக்கிறார்கள்.

ப்ளாண்ட் அல்லது மிதமான வறுப்பு உள்ள கொட்டைகளில் இருப்பதில் காஃபைன் அதிகம்.

விதூஷகன் :The auto correct in iOS 7 is killing me. It corrected காபி as காலி.

உங்களுக்குத் தெரியுமா? இந்த ஞாயித்துக்கெழமை தேசிய காபி தினம்.

ஜேம்ஸ் : பிரபஞ்சனின் ஒரு கதையில் கும்பகோணமோ அல்லது பாண்டிச்சேரியோ – ஒரு பில்டர் காபி குடித்துவிட்டு சற்று நேரம் கழித்து இன்னொன்று சொல்வார் – காபி மாஸ்டருக்கு அது பெரிய அங்கீகாரம்…

Sunday is national coffee day என்று எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

தேவந்தி : ஸ்டார்பக்ஸில் காப்பிக்கு நின்றபோது நோட்டீஸ் பார்த்திருப்பார். முழு குடும்பத்துக்கும் காப்பிதினத்தன்று அன்லிமிடட் காப்பி  4.99 க்கு என்று!!

(ஓ நாங்கள் மௌன்ட் ரெயினியரைப் பார்த்துவிட்டு திரும்புகையில் ஒரு ஸ்டார் பக்ஸில் ப்ரூ அஃப் தெ டே கேட்டோம். தீர்ந்து போய்விட்டது. இதோ செய்து கொடுக்கிறோம். 5 நிமிடங்கள் ஆகும் என்றார்கள். 5 நிமிடம் கழித்து காப்பியைக் கொடுத்துவிட்டு ‘காக்கவைத்தோம் அதனால் பணம் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்கள்!

இதுவல்லவோ கஸ்டமர் ஸர்வீஸ்!!)

பேராசிரியர் கேசவன் : நான் வீட்டில் தண்ணி காப்பி குடிக்கும் ரகம். காபிக்கொட்டையை வாங்கி, அரைத்து, பொடியில் தண்ணீர் கலந்து, நல்ல காபி வரும் வரை பொறுமை கிடையாது. அனேகமாக ப்ரூ. இல்லாவிட்டால், நாலு நாளுக்கு சேர்த்து ஃபோல்ஜர்ஸ் பொடி மூலம் பல நாள் தேய்க்காத அழுக்கு ஃபில்டரில் வரும் காபி. அதை ஃப்ரிட்ஜில் வைத்து பனிக்கட்டி சேர்த்து அப்படியே குடிக்க வேண்டியதுதான்.
பூதம் : ஐயய்யோ. உரத்து சொல்லாதீர்கள். இன்ஸ்டண்ட் காப்பி குடித்து பில்டர் காப்பியை அவமதித்த குற்றத்துக்கு மைலாப்பூர் மாமாக்கள் உங்களைஅடுத்தமுறை ஏரியாவை விட்டு தள்ளி வைத்துவிடுவார்கள்.
விதூஷகன் : ஒரு வாரத்திற்கு 28 காபிக்கு மேல் குடிக்காதீர்கள் என்னும் ஆராய்ச்சி 

பேராசிரியர் கேசவன் : இங்கு கொஞ்சம் காஃபி தயாரிப்பு குறிப்புகள். இப்படி ஒரு தயாரிப்பு முறை உண்டு- நெபாலிடானோ. இது ஃப்ரெஞ்சு முறை என்றும் சொல்கிறார்களாம்

தேவந்தி : காப்பி என்றாலே என் நினைவில் வருவது சிறுவயதில் என் பாட்டி வீட்டில் பார்த்ததுதான். பீபெரிக்கொட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, வாரம் ஒரு முறை காப்பிக்கொட்டையை வறுத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைத்துக்கொள்வாள். மதியம் சரியாய் 2 30 மணிக்கு அதில் ஒரு கையளவு எடுத்து ஒரு காப்பிக்கொட்டை அறைக்கும் யந்திரத்தில் போட்டுப் சக்கரம் போன்ற ஒரு கைப்பிடியை சுற்றி அதைப் பொடி செய்வாள். நாங்கள் அதைச் செய்யப் போட்டி போடுவோம்.

மணக்க மணக்க அந்தப் பொடியை எடுத்து ஒரு பெரிய பித்தளை பில்டரில் போட்டு கொதிக்கும் வென்னீரை அதில் விட்ட கையோடு அடுப்பில் பாலை காய வைத்து, இரண்டையும் கலந்து சக்கரை போட்டுக் கொடுப்பாள். அந்தக் காப்பிக்கு பாதி ராஜ்ஜியம் (இருந்திருந்தால்) எழுதிக்கொடுத்திருக்கலாம்.

காலையிலும் இப்படி ஒரு முறை நடந்திருக்கும்.அப்போதுதான் கறந்த பசும்பாலைக் காய்ச்சி அதில் புது டிகாக்‌ஷனை ஊற்றிக் கலந்த காப்பி. அதற்கு முன்னே ஸ்டார்பக்ஸெல்லாம் கடையை மூட வேண்டியதுதான்.

பூதம் : அதில் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று அன்று காஃபிக் கொட்டைகள் இன்றை விட ஆரோக்கியமான மண், சூழலில் வளர்ந்த செடிகளின் விளைவு. அனேகமாக நவீன தொழில் முறை உற்பத்தி இல்லாது, சூரிய வெப்பத்தில் உலர்த்தப்பட்டு காய்ந்த கொட்டைகளாக இருந்திருக்கும். இன்று எல்லாம் உலர் கொட்டகைகளில், பெரும் எந்திரங்களால் உலர்த்தப்படும் கொட்டைகளாக இருக்கவே வாய்ப்பதிகம்.

தவிர உள்நாட்டு உற்பத்தி உள்நாட்டிலேயே பெருமளவு விற்கப்பட்டிருக்கும். இன்று மூன்றாம் தரக் கொட்டைகளே உள்நாட்டில் விற்கப்படுகின்றன.

இரண்டாவதும், முக்கியமானதுமான விஷயம். வீட்டில் கறந்த பசும்பால், பாஸ்சரைஸிங் என்ற முறையால் சுவை எல்லாம் இழக்காது, நேராகக் காய்ச்சிய உடன், காஃபியில் கலந்தமை. அப்படி ஒரு பால் இந்தியாவில் அனேகமாக எங்குமே இன்று கிட்டாது. கிட்டுவதெல்லாம் யூரோப்பிய பால்பொடியில் கலந்த பால்தான். அமெரிக்காவிலும் கிருமிகளுக்குப் பயந்து, pasteurization முறையில் சுவையிழந்த பால்தான் எங்கும் கிட்டுகிறது. சமீபத்தில் ‘raw milk’ என்ற ஒன்றை FDA என்ற கண்காணிப்பு/ கட்டுப்பாடு செய்யும் அமைப்பின் பார்வைக்குப் படாமல் அமெரிக்க பால்பண்ணைகள் சில, ஆர்கானிக் முறைப் பண்ணைகள் இவை, விற்கின்றன. இதே போல பாஸ்சரைஸ் ஆகாத பாலைச் சில பெரும் மளிகைகளும் விற்கின்றன என்று நினைக்கிறேன். ஹோல் ஃபுட்ஸ் மளிகையிலேயே இப்படிச் சில பால் வகைகள் கிட்டுகின்றன என்று நினைவு. ஆனால் சாதாரணப் பாலைப் போல மூன்று மடங்கு விலை. யாரால் அப்படிக் கொடுத்துக் காஃபி சாப்பிட முடியும்? பில் கேட்ஸ், வாரன் பஃபெட்..?

பேராசிரியர் கேசவன்: இங்கே ஒருத்தர் ‘அறிவியல் சோதனை’ செய்து எது நல்ல காஃபி தயாரிக்கிற முறை என்று கண்டிருக்கிறாராம். களிமண் காலில் நிற்கிறார் – குடிப்பவர்களில் எத்தனை சதவீதம் ஒன்றை நல்ல காஃபி என்று சொல்கிறார்கள் என்பதுதான் தீர்மானிக்கிறதாம். என்னைப் போல இன்ஸ்டண்ட் காஃபியே போதும் என்பவர்களுக்கு மேற்படி காஃபிகள் எதைக் குடித்தாலும் ஒன்றே போலவோ, அல்லது ஏதாவது ஒன்றை அவசரமாகத் தேர்ந்தெடுத்து விட்டுப் போகவோதான் தோன்றும்.

மேற்படி கட்டுரையாளர் விதந்தோதும் ஏரோப்ரஸ் என்ற கருவி என்னவாம்? அது இங்கே விளக்கப்படுகிறது.

பூதம்: கா நா சுப்ரமணியம் எழுதிய பொய்த்தேவு நாவலை படித்ததுண்டா? காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கும் பழக்கத்தை ராயர் வைத்திருக்கிறார். உடனே அந்த குறிப்பைத்தொடர்ந்து “அந்த ஊரிலேயே அவர் ஒருவர் தான் காலையில் காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்” என்றும் வருகிறது. இதைப் பார்த்து திராவிட ஆராய்ச்சியாளர்கள் கூட “அந்த காலத்தில் காபி இல்லை” என்கிறார்கள்.

பேராசிரியர் கேசவன்: இந்த மாதிரி முட்டாள்தனமான காஃபி செய்திகள் நிறையப் பார்க்கலாம்.

பாஸ்டன் பாலாஜி: முந்தாநாள் நியு யார்க்கின் ஜார்ஜ் ஏரியில் பின்மதியம் நான்கரை மணிக்கு குளம்பி வாங்குவதற்காக ஸ்டார்பக்ஸ் சென்றிருந்தேன். எனக்கு முன்னால் இருந்தவன் ‘கால் ஸ்பூன் சர்க்கரை; 1/2 & 1/2 பாதி; மீதத்திற்கு 2% பால்; அதி சூடு டிகாசன்’ என்று அனுபவித்து தனக்கு வேண்டிய காபியின் பாகங்களை விரிவாக சொல்லி முடித்தான். சொல்லி முடித்த அடுத்த நொடியே படு கோபமாக ‘எனக்கு ஏற்கனவே உங்க ஊரில் பார்க்கிங் டிக்கெட் ஒரு தடவை கொடுத்துட்டாங்க… சீக்கிரம் கலந்து கொடுங்க… உங்க தயவில் இன்னொன்றை உங்க குக்கிராமத்துக்குக் கொடுக்க தயாராக இல்லை’ என்று கடுமையாக சுடுசொல் உதிர்த்தான். அவனை கண்டிக்க மனசு முயன்றாலும், ஜிம்முக்கு போய் வளர்த்த ஆஜானுபாகத் தோற்றத்தைப் பார்த்த மூளைத் தடுத்து நிறுத்தியது.

அவனுக்கு கொட்டை வடிநீர் வழங்கிய பிறகு, தேவையில்லாத சாடலுக்கு உள்ளான காபி தயாரித்து வழங்குபவர்களைப் பார்த்து ‘That was rude’ என்று பகிர்ந்தவுடன் மனசு லேசானது.

சில சமயம் காபி வாங்கிக் கொண்டு கதவருகே செல்பவர்களின் காதிலும் உன்னுடைய மறுமொழிகள் விழலாம். அதனால், சாக்கிரதையா சொல்லணும்.

பேராசிரியர் கேசவன்: KOPI LUWAK அல்லது  CIVET COFFEE என்பதைப் பற்றி இன்று பேப்பரில் படித்தேன். காப்பிக்கொட்டையைத் தின்னும் புனுகுப் பூனையின் கழிவிலிருந்து எடுக்கப்படும் காப்பிக்கொட்டைகளில் செய்யும் காப்பியாம். (ஐயையோ, கர்மம்!) இதன் விலை ஒர் கப்புக்கு 60 $!

ஜேம்ஸ்: குடிக்காதே தம்பி குடிக்காதே என்கிறார்கள். எனக்கு 107.93 கோப்பை குடித்தால் சங்கு என்கிறார்கள். அப்படியானால் என்னுடைய எடை எவ்வளவு!?

பாஸ்டன் பாலாஜி: இப்போ எல்லாம் காபிக்கடையில்தான் திருடர்கள் ஜாஸ்தியாயிட்டாங்க. எல்லோரும் இலவச இணையத்திற்காக அங்கேயே குடியிருக்காங்க. அப்போ, அங்கே வலையை எப்படி பயன்படுத்துறாங்க, என்ன மடல் பார்க்கிறாங்க என்பதையெல்லாம் கன்னக்கோல் இல்லாம கம்பியில்லா வலைப்பின்னலில் பார்த்து நம்மோட பாஸ்வோர்ட்களை கண்டுபிடிச்சுடறாங்க. இதை மையமா வச்சு, அமெரிக்க எக்ஸ்பிரஸ் கூட நிறைய விளம்பரம் செய்யறதப் பார்த்தேன்.

விதூஷகன் : நடிகர் சிம்பு பாடலாசிரியாக இருந்த “வேர் இஸ் தி பார்ட்டி” – பாடலில் கூட காபியைக் குறித்து இரட்டுற மொழியும் கவிதை புனைந்திருக்கிறார்.

வீட்ல இருந்து போகும்போது எல்லாத்தையும் மறைக்கிறாங்க
பப்புல பார்த்தா எல்லாத்தையும் குறைப்பீங்க
உன்ன குத்தம் சொல்லாதே
சந்தோசத்த கொல்லாதே

என்னதான் நாடு முன்னேறினாலும் திருடர், தாதா, முரடர்களின் பயம் அதிகரித்துள்ளது. அதனால், வீட்டுக் கணினியில் குக்கீ, ஹிஸ்டரி, கேச் எல்லாம் அவ்வப்போது கவனமாக நீக்கி பவ்யமாக மறைக்கிறார்கள். ஆனால், காபிஷாப் கணினியில் மேய்ந்தாலோ, இதற்கு நேர் மாறாக தவணை அட்டையைக் கூட பயன்படுத்தும் உலகம். அங்கே உலாவும் கொந்தர்களிடம் அடையாளத்தை இழக்கும் கொடுமையை என்னென்று சொல்வது! இதன் பிறகு என்னை குற்றம் சொல்லாதே. பணத்தை பறிகொடுத்து வங்கிக் கணக்கையும் தானம் வார்த்து தலையைக் குனியாதே!

****

Exit mobile version