சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா?

சவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.

சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?

முத்தவாக்கள் ( Mutaween – Religious Police) தான் பெரும்பாலான நேரங்களில், பொது இடங்களில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மதச் சட்டங்கள் என்ற பெயரில் “பாதுகாவலர் சட்டத்தை” மனதில் கொண்டு பல இன்னல்களையும் தண்டனைகளையும் வழங்கக் காரணமானவர்கள். இவர்கள் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட , மதச் சட்ட முறைகளை மக்கள் பின்பற்றுகிறார்களா எனக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்யும் அதிகாரமும் சில வருடங்கள் முன்வரை அடிக்கும் உரிமையையும் கொண்டிருந்தவர்கள். அவர்களைப் பார்த்தவுடனே எளிதாக அடையாளம் காண இயலும். பெரிய அண்ணனின் சட்டையயும், கடைசித்தம்பியின் பேண்டையும் மாட்டிக்கொண்டால் ஒருவர் எப்படி இருப்பார்? அப்படித்தான் அவர்களின் ஆடையும், ட்ரிம் செய்யப்படாத தாடியும் இருக்கும்.