துணிப்பிடிப்பி தொழிலகத்தில் நாங்கள் அடிக்கடி லெனினை நினைத்துக்கொள்வோம்

கை டாவன்போர்ட்டின் ‘We Often Think of Lenin at the Clothespin Factory’ என்ற கவிதை ஒரு டெகாஸிலபிக் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது (ஆங்கில பாவின அடிகள் accentual-syllable கணக்கை அடிப்படையாய்க் கொண்டவை. தமிழில் குற்றெழுத்து தவிர்த்து பத்து எழுத்துக்கள் கொண்ட அடி என்று கொள்ளலாம்). கிரேக்க அபிநயக்கூத்துக்களை மொழிபெயர்க்க டாவன்போர்ட் இவ்வடிவைப் பயன்படுத்தியிருக்கிறார்.

இக்கவிதை மேற்கூறிய எதிர்களின் உரையாடலாய் அமைக்கப்பட்டுள்ளது: பெயர் குறிப்பிடப்படாத ஒரு பெண், மாண்டல்ஸ்டாமின் விதவையின் சாயல் கொண்டவளின் பின்னோக்கு தரிசனத்தின் ஆதர்சவுலகம், தனது “பொன்னுலகம்” அழித்தொழித்த மகோன்னதங்கள் பற்றிய ஓர்மை சிறிதும் இல்லாத, கோட்பாட்டு மயக்கத்தில் ஆழ்த்தப்பட்ட கட்சிக்காரன் ஒருவனை எதிர்கொள்கிறது. ஆனால் இது எளிய கருப்பு வெள்ளைச் சித்திரம் அல்ல.