உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார். உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது. நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.
Tag: ஹிந்தி நாவல்
ஏ பெண்ணே
என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.