தொடுதிரை

நூறாண்டு நின்று செழித்துப் படர்ந்த வேம்புதான் சாமி. கிழக்கே உதித்து மேலேறும் சித்திரை மாத முழுநிலா, வானம் குழந்தை முகம்போல தெளிந்து ஒளிர்ந்தது, செவ்வந்திப் பூக்கள் சிரித்திருக்கும் வயல், குலதெய்வம் வேம்புக்கு முன்னால் சக்கரைப் பொங்கல், வெற்றிலை பாக்கு, பூ பழம், பொறிகடலை படையல், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவைக்கும் அம்மா, ஆற்றுநீரில் தெரியும் மணல்போன்ற அம்மாவின் வண்ணம். இலைவழி வழியும் நிலவு அம்மாவின்மேல் பொன்பொழியும் கணம். இடுப்பு வேட்டியில் இறுக்கிக்கட்டிய துண்டோடு, திறந்த மார்போடு, கற்பூரதீபம் ஏற்ற பனை மரம்போல் நிற்கும் அப்பா.