தற்போது பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிரைமரி தேர்தலில் வென்று அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மத்திய அரசின் முக்கிய பிரிவுகளை மாற்றியமைப்பதாகவும் சமூக பாதுகாப்பு வலைத்திட்டங்களைக் குறைப்பதாகவும் கூறியுள்ளார். பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குத் தொடுக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதாகக் கூறி தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்துள்ளார்!
Tag: லதா குப்பா
இகிகை
‘இகிகை’ என்பது நான்கு கூற்றுகளின் கலவையாகும்: நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறந்தவர், உலகிற்கு என்ன தேவை, உங்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்தேவையை எவ்வாறு நிவர்த்தி செய்வது? என்பதே அந்த நான்கு அடிப்படை மூலக்கூறுகள். “உங்கள் இகிகையைக் கண்டுபிடிப்பது என்பது ஒரு வேலை அல்லது பொழுதுபோக்கைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, மாறாக உங்கள் தனித்துவமான நோக்கத்தையும் வாழ்க்கையின் பொருளையும் கண்டறிவதாகும்” என்பதை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் (2024) வியூகங்கள்!
நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ட்ரம்ப்புடன் முன்பு தனக்கு இருந்த தொடர்பைப் பற்றி 2016 தேர்தலில் பேசாமல் இருக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். ட்ரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோஹன், ‘ஹஷ்’ பணம் செலுத்தி பிரச்சார நிதி மீறல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்பொழுது விசாரணை நடந்து வருகிறது. இது ட்ரம்ப்பைச் சட்டவிரோத நடவடிக்கைகளில் சிக்க வைக்கக்கூடும். ஆனால் ஸ்டார்மி டேனியல்ஸ் தொடுத்த ‘அவதூறு’ வழக்கில் ட்ரம்ப்பிற்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
காசி
காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.
ரிஷிகேஷ்
விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதைக் குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா…
பத்ரிநாத் – ரிஷிகேஷ்
பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம்.
குப்தகாசி – பத்ரிநாத்
கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
கேதார்நாத்
மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!
உத்தரகாசி -குப்தகாசி
இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.
கங்கோத்ரி
வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.
உத்தரகாசி
பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.
யமுனோத்ரி
யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?
பர்கோட்
முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்
“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
கங்கா தேசத்தை நோக்கி
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். “கங்கா தேசத்தை நோக்கி”
கல்விக் கடனும், 2022 ஆம் ஆண்டின் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலும்
இச்செலவுகள் இரண்டும் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பதால் தேர்தலின் மையப்புள்ளியாகவும் கல்லூரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் கட்டணத்தால் கல்லூரிக்கல்வி என்பது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருப்பதும் இந்நிலையை மாற்ற தேசிய, மாநில, கல்லூரி அளவில் பல இலவச நிதிச்சலுகைகள் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தற்போது கடன் வாங்கினால் மட்டுமே கல்வியைத் தொடர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது என்பது தான் நிதர்சனம். இதில் தேசிய, மாநில அரசுகளின் பங்கு என்ன? இந்த நிலையை எப்படி மாற்றப் போகிறார்கள் என்பது தொடர் விவாதமாகவே இருந்து வருகிறது.
கருக்கலைப்பு உரிமை- அமெரிக்க அரசியலின் வினோதங்கள்
இவர்களில் கணிசமானோர் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள். வேலை இழப்பு, குடும்ப வன்முறை காரணமாக தனித்து விடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், பொருளாதார பின்னடைவில் சிக்கியவர்கள் என பட்டியல் நீளுகிறது. இந்த தீர்ப்பின் மூலமாக இனி இவர்கள் கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாதவர்களாகி விடுவர். இந்த வருடத்தில் மட்டும் 100,000 பெண்கள் கருக்கலைப்பு செய்ய முடியாதவர்களாகி விடுவர் என்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் இந்தப் பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும். இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை பாதிப்புகள், பொருளாதார சிக்கல்கள், விருப்பமில்லாத உறவில் நீடிக்க வேண்டிய கட்டாயம், குழந்தைகள் பிறந்த பின்னர் அவர்களை வளர்க்க போதுமான ஆதரவில்லாத நிலமை என பெண்களுக்கான பாதிப்புகளுக்கான தீர்வுகள் அல்லது மாற்றுத் திட்டங்கள் எதனையும் இந்த தீர்ப்பு பேசவே இல்லை.இச்சட்டம் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைக் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பெண்களின் மீதான வன்முறை தான். மேலும், கருத்தடை செய்து கொள்பவர்களுக்கும் கருவைக் கொன்ற குற்றவாளியாக கருதி தண்டனைகள் வழங்குவதும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி.
அமெரிக்க இடைத் தேர்தல்களுக்கான முதல் சுற்று- 2022
தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று காங்கிரஸில் பெரும்பான்மை உறுப்பினர்களுடன் அமெரிக்காவின் 46வது அதிபராக 2020 ஜனவரியில் பொறுப்பேற்று இரண்டு வருடங்களையும் பூர்த்தி செய்துவிட்டது பைடன் அரசு. குழப்பமான கால கட்டத்தில் பதவியேற்று கோவிட் கலவரங்களுக்கிடையில் தான் சிறப்பாக செயல்படுவதாக அதிபர் பைடன் கூறினாலும் மக்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்திருக்கிறார் என்பது தான் உண்மை. மக்களின் ஏமாற்றம் இடைத்தேர்தலில் பிரதிபலிக்குமா என்பதைத் தான் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கிற தேர்தல் தீர்மானிக்கப் போகிறது.
இந்திய மறுமலர்ச்சியைக் கொணரும் நவோதயா பள்ளிகள்
அரசுப் பள்ளிகளில் பயிலும் பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த கிராமப்புற மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் “மாதிரி பள்ளிகள்” எனப்படும் இணை கல்வி நிறுவனங்களை அமைக்க 1985ல் மத்திய அரசு தீர்மானித்தது. அன்றைய பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி, “ஜவஹர் நவோதயா வித்யாலயா(ஜேஎன்வி)” எனப்படும் பள்ளிகளை, இருபாலாருக்குமான ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான இலவச குடியிருப்புப் பள்ளிகள் திட்டமாக, 1986ல் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் “நவோதயா வித்யாலயா சமிதி” எனும் ஒரு தன்னாட்சி அமைப்பு இப்பள்ளிகளை நிர்வகிக்கிறது.
பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை
நாட்டின் சாலைகள், பாலங்கள், தண்டவாளங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் நீண்ட கால மேம்பாடுகளை “பில்ட் பேக் கட்டமைப்பு” திட்டத்துடன் இணைந்து ஆண்டுக்கு சராசரியாக ஒன்றரை மில்லியன்(1,500,000) புதிய வேலைகள் உருவாக்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி! இதற்காக ஒரு ட்ரில்லியன் டாலர் உள்கட்டமைப்பு மசோதாவையும் சிரமப்பட்டு இரு கட்சிகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றியதை பைடன் அரசின் சாதனையாக ஜனநாயக கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும்
மற்ற தொழில்மயமான நாடுகளைப் போலவே கனடாவும் குறைவான விலையில் எளிதில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மருந்துகளின் மீதான விலைக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே அங்கு குறைந்த விலையில் இன்சுலின் கிடைப்பதற்குக் காரணம். கனடாவைப்போல் மருந்தின் விலையை அரசு நிர்ணயம் செய்யாததும், லாப நோக்குடன் செயல்படும் மருந்து உற்பத்தி, மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் அராஜகப் போக்குகளே அமெரிக்காவில் இன்சுலின் விலை ஏற்றத்திற்குக் காரணம்.
600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!
அரசியலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் கட்சியே நிலைத்த ஆட்சியைத் தர முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபணமாக்கியுள்ளது கனடாவில் நடந்த சமீபத்திய தேர்தல். உலகிலேயே பரப்பளவில் இரண்டாவது பெரிய நாடும் மக்கள் தொகையில் அதிகமுள்ள நாடுகளில் 38வது இடத்தை வகிக்கும் கனடாவில் 38 million மக்கள் வசிக்கிறார்கள். “600 மில்லியன் டாலர் செலவு! அதே பழைய முடிவு!!”
”ஆசிய அமெரிக்கர்கள்” – அமெரிக்காவில் மிகையாகும் வெறுப்பரசியல்
இன்று அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே உள்ள இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவி வரை எட்டியிருப்பது மற்ற அனைவரின் கண்களை உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது அமைந்திருக்கும் பைடன் அரசில் பல்வேறு உயர் பதவிகள் இந்தியர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டிருப்பதாக பலரும் வெளிப்படையாகவே புலம்பி வருவதையும் மறந்துவிடக் கூடாது.
சீனர்களிடம் காட்டப்படும் வெளிப்படையான வெறுப்புணர்வு, இந்தியர்களிடம் இலைமறையாக காட்டப்படுகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.
மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு
கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர்.
ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை
1960-1970களில் ‘ஜிம் க்ரோ சட்டங்கள்’ நீக்கப்பட்ட பிறகு, குற்றம் புரிந்தவர்களாக அறியப்படுபவர்கள், தண்டனைக் காலம் முடிவடைந்தவுடன் , பல மாநிலங்களில் வாக்களிக்க அனுமதிக்கும்போது, ஃப்ளோரிடாவும் வேறு சில மாநிலங்களும் அந்த தடையை மாற்றிக் கொள்ளவே இல்லை. மேலும் இம்மாநிலங்களில் போதை மருந்து குற்றங்களுக்காக அதிக அளவில் கறுப்பர்கள் சிறைத் தண்டனை பெறுகிறார்கள். இதனால் ஐந்தில் ஒரு கறுப்பர் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020
மூன்றாம் நாள் மாநாட்டில் முன்னாள் அதிபர் வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன், சபாநாயகர் நான்சி பெலோசி, செனட்டர் எலிசபெத் வாரன், முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் கேபி கிப்பர்ட்ஸ், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் எனப் பெண்களின் குரலே ஓங்கி ஒலித்தது.
அன்றைய தினம் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தது முன்னாள் அதிபர் ஒபாமாவின் பேச்சுதான்……கடந்த நான்கு வருடங்களில் அதிபர் ட்ரம்ப் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியதோடு, தன்னுடைய முதிர்ச்சியற்ற, அடாவடித்தனமான பல அரசியல் நிர்வாக முடிவுகளினால் நாடு பலவகையிலும் தன் மதிப்பை இழந்து எல்லாத்தரப்பிலும் பாதிக்கப்பட்ட, அமைதியற்ற ஒரு தேசமாக மாறியிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்த அவலத்தில் இருந்து அடுத்த நான்கு ஆண்டுகளில் நாட்டை மீட்டெடுக்க, அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய பண்பான, மனிதநேயம்கொண்ட பைடனே பொறுத்தமான நபராக இருப்பார் – என்பதாகப் பேசினார் ஒபாமா.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020
தமிழகத்து ஷ்யாமளாவிற்கும், ஜமைக்காவின் ஹாரிஸுக்கும் அமெரிக்க மண்ணில் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ். தன் பெயரைத் தவிர வேறெந்த இந்திய அடையாளங்களையும் முன்னிருத்தாதவர் கமலா. அவரின் சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிரிந்து தாயிடம் வளர்ந்திருந்தாலும் தந்தையின் வழியில் தன்னை கறுப்பின கிறிஸ்தவ பெண்ணாக, ஆஃப்ரிக்கன் அமெரிக்கனாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறவர். கறுப்பின அமெரிக்கர்களுக்காக, தனியாரால் நடத்தப்படும் ‘ஹாவர்ட் பல்கலை’ யில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார்.
விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!
வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.
இளம்பருவத்தோள்
அமெரிக்க வாழ் இந்தியர்களைப் பற்றிய முதல் நெட்ஃபிளிக்ஸ் தொடர் அமெரிக்கத் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தி ஆஃபீஸ்” என்ற அமெரிக்க நாடகத்தில் நடித்துப் பிரபலமான இந்திய வம்சாவளி மிண்டி கேலிங் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை “Never Have I Ever” தொடராக இயக்கியிருக்கிறார்.
கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி
அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமான நிதர்சனம். இந்தியாவில் எந்த மூலையில் ஒருவர் பாதிப்புக்குள்ளானாலும் அதை உறுதி செய்யும் பரிசோதனையைப் பூனாவில் இருக்கும் ஓர் ஆய்வகத்தில்தான் செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலமையைச் சமாளிக்க முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்
அதிபர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னுடைய பதவிக்கோ நாட்டு மக்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, லஞ்சம், ஊழல், பெருங்குற்றங்கள் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் குற்றச்சாட்டுக்களையும் அதன் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. செனட் விசாரணையும் முடிந்து குற்றங்கள் நிரூபணம் ஆகும் வரை அதிபர் பதவியிலிருப்பவர் ஆட்சியில் தொடர முடியும்.
பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
பல்வேறு காரணங்களினால் தாய் மண்ணை விட்டு விலகி வெளிநாடுகளில் தங்கி இருப்பவர்களின் மனநிலை, வாழ்வியல் நிதர்சனங்கள்,சொந்தங்களை விட்டு விலகியிருந்துவிட்டு தாய்நாடு திரும்பி தனக்கான புதிய அடையாளத்தை தேடிக் கொள்வதில் இருக்கும் சிரமம் அதன் வலி என பலவகையிலும் இந்த நூல் எனக்கு நெருக்கமாய் இருந்தது.