ஆனால் மௌனியின் மீது புதுமைப்பித்தனுக்கு பெரிய மரியாதை இருந்தது என்பதை இக்கூற்று இடம்பெற்ற சிறுகதை மறுமலர்ச்சி காலம் என்ற கட்டுரையை (1946ல் வெளியானது) முழுதாக வாசித்தாலே உணர்ந்து கொண்டு விட முடியும். அக்கட்டுரையில் அதுவரை தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் மௌனியின் ‘எங்கிருந்தோ வந்தான்’, தன்னுடைய ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ உள்ளிட்ட நான்கு கதைகளை தமிழின் ஒப்பற்ற கதைகள் என்று புதுமைப்பித்தன் சொல்கிறார். புதுமைப்பித்தனின் சமகாலத்தவரான கநாசுவுக்கு மௌனியின் கதைகள் மீது பெரும் மயக்கமே இருந்திருக்கிறது. சி.சு.செல்லப்பா எழுதிய விரிவான கட்டுரையிலும் (மௌனியின் மனக்கோலம்) மௌனியின் கதைகள் குறித்த தீவிரமான பற்று வெளிப்படுவதை பார்க்கலாம்.