மனிதர் இடையீடு இல்லாமல் கணினிகள் தாமாக தமக்கிடையே தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிகிற அளவுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் இன்றைய நிலையில் , மொழியின் வரையறுப்பும் விஸ்தரிக்கப்பட வேண்டிய நிலை வரக்கூடும். அப்போதும் மனிதனை ஆக்குவது மொழிதான். ஆனால் அவ்வாறு விஸ்தரிக்கப்பட்ட வரையறுப்பு, எந்திரங்கள் தம் சொந்த மொழியில் தமக்குள்ளே தொடர்பு வைக்க, தேவைகளையும் விருப்பங்களையும் தெரிவிக்க, ஆணையிட, உருவாக்க, உற்பத்தி செய்ய வழி வகுக்கும். ஆதியில் மனிதன் தனக்காக உருவாக்கிக் கொண்ட மொழி, தன் மனித இணைப்புகளைத் துறந்த, ஒரு புது தொடர்பு அமைப்பாக வெளிப்படும்.