மரிலின் ராபின்சனின் 'ஹவுஸ்கீப்பிங்' அல்லது வீடு பேறடைதல்

அம்மாவின் தற்கொலை ரூத் மற்றும் அவளது சகோதரி லூசில்லில் அக மையத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. நாவல் அடுத்தடுத்த கட்டங்களை அடையும்போது இவர்கள் இருவரும் தம் உள்ளத்தின் வெறுமையை இட்டு நிரப்பிக் கொள்ள தமக்கேற்ற  வெவ்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். ஒரு வகையில், இழப்பின் மீதான தியானமாய் ‘ஹவுஸ்கீப்பிங்’கை நினைத்துக் கொள்ளலாம், அதிலும் குறிப்பாய், அம்மாவின் இழப்பு மீதான தியானம், என்று. மேற்குலக இலக்கிய மரபு அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிளவை (‘கிங் லியர்’), மகனுக்கு அம்மாவுக்கும் இடையிலான பேதத்தை (‘ஹாம்லட்’/ ‘ஈடிபஸ்’) மகத்தான துன்பியல் நாடகங்களாகத் தொகுத்துக் கொண்டிருக்கின்றது என்றாலும், “அம்மா-மகள் நேசம் மற்றும் ஆனந்தத்துக்கு, நிலையான அங்கீகாரம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை”, என்று (அட்ரியன் ரிச் சொற்களில்) சொல்லலாம் என்பதால் ‘ஹவுஸ்கீப்பிங்’கின் இந்தக் கூறு விமரிசகர்களால் முன்னோடியான ஒன்றாய் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.