அம்மா சமையலறையில் காய்ச்சும் பாலின் மணம் வழக்கம் போல இல்லை; அம்மா வேறெதோ செய்யப் போகிறாள்- ஒருக்கால் திரட்டிப் பால் காய்ச்சுகிறாளோ? இல்லை, அம்மா அதில் எலுமிச்சையைப் பிழிந்தாள்; பால் திரிந்தது “என்னதிது’ என்று அப்பா ஆச்சர்யமாகக் கேட்டார். திரிஞ்ச பாலை துண்டுல வடிகட்டி அம்மா செஞ்ச ரஸகுல்லா எனக்குப் பிடித்தது. ‘பாலயே திரிச்சுட்டே’ என்று அப்பா கிண்டலாகச் சொன்ன போது எனக்கு சிரிப்புடன் கூடக்கூட மற்றொன்றும் மனதில் எழுந்தது; முதலில் கலக்கமாக இருந்தது. ஏதோ ஒன்று எச்சரித்தது. அதையும் மீறி குரலொன்று ஒலித்துக் கொண்டே இருந்தது. யாரிடம் கேட்பது, அம்மா, அப்பா, பாலுவிடம்..அவன் ஒருத்தன் தான் மற்ற நண்பர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்களின் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறான். ‘அத்தால போயி ஆட்றதுதான, சும்மா சும்மா எங்கள சுத்திட்டிருக்கே’ என்று சொல்லும் பிற நண்பர்களின் வாயை அடைப்பதும் அவன்தான். ஆனால், அவனுக்கும் என் வயதுதானே, அவனுக்கெப்படித் தெரியும்?