ஒரு சில ஒற்றை வரிகளில், பெரும் மனவெடிப்பை உண்டுபண்ணி விடுகிறார். அது வாசிப்பவரின் மன அலைவரிசையைப் பொறுத்தது என்றாலும், அந்த எளிமையாக ஒரு கனமான விஷயத்தை சொல்லிப்போவது அசோகமித்திரனை நினைவூட்டுகிறது. உதாரணமாக பாட்டி பேரனிடம் கதைகள் சொல்கிறாள். சில கற்பனைகள். சில வாழ்வின் உண்மைகள். அனுபவங்கள். அதில் பாட்டி தான் அந்த காலத்தில் இருந்த கிராமபோனைப் பற்றியும், தான் பாடிய நாட்களிப் பற்றியும் சொல்லும்போது – “அதை விடு.. இதைப் பாடும்போதெல்லாம் எனக்கு என் பெரியண்ணா ஞாபகம் வந்துவிடும். சீர் கொடுப்பதற்காக வந்து செருப்படி வாங்கிக்கொண்டு போனானே.அந்த உத்தமன் முகம் கூட எனக்கு மறந்துட்டதேடா கிருஷ்ணா. எவ்வளவு செல்லமா வச்சிருப்பான் என்னை.பாவி. நான் அன்னிக்கே செத்திருக்க வேணாமா சொல்லு ” என்பாள். இதைப் படித்து விட்டு என்னால் மேலும் படிக்க முடியாமல் மனம் அலைக்கழித்தது. நீர்பட்ட பஞ்சு போலானது மனம்.