தறிகெட்டு இயங்கும் மரபணுக்களின் அசாதாரண செயல்களை விவரிக்கும் கேன்சரின் கதை அது. நிறைய யோசித்தபின், மறுபுறம் மரபணுவின் இயல்பான செயல்பாட்டைப் பேசும் இன்னொரு கதை இருப்பதை உணர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த யிங் (Ying) கதையை பாலன்ஸ் செய்ய வந்திருக்கும் இந்த யாங் (Yang) கதை அதே சுவையுடன் வெகு நன்றாகவே வந்திருக்கிறது. கிரேக்க தத்துவஞானிகளில் துவங்கி கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளின் கதையை இந்தப் புத்தகம் சொல்கிறது. ஆங்காங்கே மன நோய்கள் விரவியிருக்கும் தன் குடும்ப வரலாற்றினூடே முகர்ஜி, மென்டல் மற்றும் டார்வின் போன்ற மகத்தான விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் துவங்கி மன நோய்களுக்கு மரபணு காரணமாகுமா என்று கேட்டுக் கொண்டு இன்று ஆய்வு செய்யப்படும் CRISPR/Cas-9 வரை வந்துவிடுகிறார்.