சந்தையில் புத்தகங்கள்

புத்தகங்கள் நிறைந்திருக்கும் கடைகளூடே நடப்பது மனத்துக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது. பல புத்தகங்களை வாங்கவும் முடிந்தது. அதைப் படிக்கும் உற்சாகமும் இன்னும் இருக்கிறது. செவிக்குணவாக ”என் தமிழ்த் தாயே” என்ற கூச்சலும் விடாமல் கேட்டது வெளி அரங்கிலிருந்து….“எங்க வீட்டுல எங்க பாட்டியும் அம்மாவும் உங்களை விரும்பிப் படிப்பாங்க. நீங்க ஆப்ரிக்காவிலிருந்து எழுதின கதைகள் பிரமாதம்னு சொன்னாங்க” என்று கனிவுடனும் “உங்க ’சமையலறை மூலையில்’ கதை அற்புதம். நிறைய எழுதுங்க. இப்போ எழுதறீங்கதானே?” என்று அக்கறையுடனும் “உங்க ‘கொலை செய்துவிட்டாள் அம்மா’ என்னை ரொம்ப பாதிச்சுதுங்க” என்று நெகிழ்ச்சியுடனும் சொல்லும் பல வாசகர்களை ஒருசேரப் புத்தகச் சந்தைகளில்தான் ஒவ்வோர் ஆண்டும் பார்க்க முடிகிறது.