எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.
Tag: புதினங்கள்
வாக்குமூலம் – அத்தியாயம் 1
நாகலிங்கப் பூவின் வாசனை இத்தனை நெருக்கடி, களேபரத்திலும் மூக்கைத் துளைக்கிறது. திருநெல்வேலியில் காந்திமதி அத்தை இருக்கிற வளவில், பின்னால் வாய்க்காலுக்குப் போகிற முடுக்கில் ஒரு உயரமான நாகலிங்க மரம் நிற்கிறது. பூக்கிற காலத்தில் பூத்துத் தள்ளிவிடும். இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் உதிர்ந்து கிடக்கும் பூவை, பூவென்றுகூடப் பாராமல்தான் எல்லோரும் மிதித்துக்கொண்டு போவார்கள். தை மாதம் வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூவையும், பீர்க்கம் பூக்களையும் அழகாகச் சொருகி வைத்திருந்தால், உச்சியில் வெயில் ஏறுகிறதற்குள் ஏதாவதொரு சாணிப் பிள்ளையாரைப் பூவுடன் சேர்த்து யாராவது மிதித்துவிட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் என்ன செய்ய முடிந்தது?