எண்ணெய்யும் தண்ணீரும்: நிரந்தர சொர்க்கம்

நிகோலா டெஸ்லா பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்து மறைந்த ஒரு சுவாரசியமான மனிதர். செர்பியாவில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்காவில் தாமஸ் எடிசனின் கம்பனிக்கு வேலை செய்து, அதன்பின் எடிசனின் மிகப்பெரிய போட்டியாளராவும் மாறியவர் இந்த விஞ்ஞானி. இவர் வரலாறும், கொள்கைகளும், பணி புரிந்த விதமும், செய்த ஆய்வுகளும் வினோதமானவை. அவருடைய லட்சியங்களில் ஒன்றாக சொல்லப்படுவது உலகில் உள்ள எல்லோருக்கும் எவ்வளவு வேண்டுமானாலும் இலவச மின்சார விநியோகம் செய்வது! இலவசம் என்றால், நிறைய வரிகளை விதித்து அதிலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து இலவச மின்சாரம் வழங்குவது மாதிரியான அரசாங்க திட்டம் இல்லை. யார் தயவையும் நம்பாமல், தன்னுடைய கண்டுபிடிப்புகள், கருவிகள், திட்டங்கள் முதலியவைகளை மட்டுமே கொண்டு எல்லோருக்கும் தேவையான அளவு இலவச மின்சாரம் தருவது பற்றி இவர் யோசித்துக்கொண்டிருந்தார். அவர் கனவு நனவாகி இருந்தால் இந்த எண்ணெய் எரிவாயு துறையே தேவையற்ற ஒன்றாக போயிருக்கக்கூடும்!