ருஷ்ய மொழியியலாளர் ரொமன் யேகப்ஸன் ஏற்கனவே விவரித்துள்ள ஆறு செயற்பாடுகள் போக இரகசியமான ஏழாவது மொழிச் ‘செயற்பாடு’ குறித்து அந்த ஆவணம் விவரிப்பதாக நம்பப்படுகிறது. எவரொருவர் அதில் மேதமை பெறுகிறாரோ, அவருக்கு ‘வலியுறுத்தல்’ ஆற்றல்களை அளிக்கவல்ல செயற்பாடு அது என்பதால் பல சிந்தனையாளர்களும் பிரெஞ்சு அரசியல் வட்டத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, எண்பதுகளில் நிலவிய பிரெஞ்சு இலக்கியச் சூழலிற்குள் விளையாட்டுத்தனம் கலந்த அரைத் தீவிர பயணம் துவங்குகிறது (பார்த், ஃபூக்கோ, சொலேர்ஸ், ஜூலியா கிரெய்சிஸ்தெவா, தெரீதா, லகான் என்று பிரெஞ்சு விமரிசன மரபின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த நாவலின் பாத்திரங்களாய் இடம் பெறுகின்றனர்).