இக்காட்சியை வேறெங்கோ பார்த்த நினைவு மின்னி மறைந்தது. பின்னர் அன்றிரவு தூக்கத்தில் ஒரு வரி, நான் தேடியது கிட்டிவிட்டது. பக்குடுக்கை நக்கண்ணியாரின் புறநானூற்றுப் பாடல் :
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே
இந்தப் பாடலிலும் சாவுமேளமும் திருமண கொண்டாட்டத்தின் இனிய முழவோசையும் ஒருசேர ஒலிக்கின்றன. “படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்” – என்ன ஒரு வரி, தமிழ்க் கவிதையில் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய வரி. கடவுள்களையே நம்பக் கூடாது என்று ஹெராக்ளீஸ் முடிவெடுக்கிறான். இப்பாடல் அதைக் காட்டிலும் மிக நுட்பமாக அவர்களை விமரிசனம் செய்கிறது. பண்படுத்தல் என்ற கோணத்திலிருந்து. உலகத்தைப் படைத்தவனை விமரிசனம் செய்வதாகவே நான் இதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.