காண்பவை எல்லாம் கருத்துகளே – 2

This entry is part 2 of 6 in the series உலக தத்துவம்

நம் சிந்தனைகள் எல்லாவற்றுக்கும் பின் ஒரு சுயம் இருக்கிறது. நம் எண்ணங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றினைக் குறித்து நிகழ்கின்றன. ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்து நம் மனது எண்ணுகிறது. நாம் எந்த விஷயத்தைப் பற்றி எண்ணுகிறோமோ அது நம் அகத்தில் ஒரு அறிபடுபொருளாக(Object) ஆக்கப்படுகிறது. நமது சுயத்தைப் பற்றி சிந்தித்தாலும் சுயம் ஒரு அறிபடுபொருளாக ஆக்கப்பட்ட பின்னரே சிந்திக்கப்படுகிறது. இருப்பினும் சுயம் முழுமையாக அறிபடுபொருளாக ஆக்கப்படுவதில்லை. சுயத்தை எவ்வளவு தான் நாம் அறிபடுபொருளாக ஆக்க முயற்சித்தாலும் அந்த மாற்றத்தை அடையாத சுயம் எஞ்சி நிற்கிறது. இதை மீறுநிலை சுயம் (transcendental ego) என்கிறார் ஃபிஷ்ட.