வெண்முரசு பிள்ளைத்தமிழ்

”ஞாலப்பெருவிசையே, ஞானப்பெருவெளியே, யோகப்பெருநிலையே இங்கெழுந்தருள்வாயே” என விண்ணிலிருந்து உடலிலியாக எழும் கமலஹாசனின் குரல்; மடியில் முலையுண்ணும் சிசுவின் உடலில் விதிர்க்கும் அசைவை  ஒரு அன்னை மட்டுமே அண்மையில் அறியக்கூடிய அவதானமாக ’விரிமலர் முதலிதழோ எனத்தோன்றும் பெருவிரலே’ என சைந்தவியின் குரலில் வரும் சரணம்; ‘சொல்லுரைத்து செயல் காட்டி சென்ற அரசே’ ‘இப்புடவியின் மேல் உன் நோக்கு ஒரு கணமும் அணையாதாகுக – என ஆணையும் விழைவும் வேண்டலுமான உச்ச ஸ்தாயில் உயர்ந்து ஒலிக்கும் சரணத்திற்கு ஸ்ரீராமின் குரல்…

முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள்

வெண்முரசின் தொடக்கமான முதற்கனல் யுகசந்தி எனும் சொல்லுக்கு ஏற்ப குல தர்மத்தை மீறி எழும் அறத்தைப் பேசுகிறது. மஹாபாரதம் எனும் விதைநிலம் வேதத்துக்கும், மேலான மானுட அறத்துக்கும், அசுர வேதத்திலிருந்து கிருஷ்ண வேதத்துக்கு ஏறிச்செல்லும் வழியாக அமைகிறது. அதற்கு மானுட இச்சையே ஒரு காரணம் எனவும் அதற்கான சமானமான சக்திகளின் உருவாக்கமும் அழிவுமே மஹாபாரதத்தின் விளைநிலம் என்பதை முன்வைக்கும் நாவலாக முதற்கனல் உருவாகியுள்ளது.