தேடலும் மறத்தலும்

அட்சுததாவுக்குப் பல காதல்கள் இருந்ததாக “யமாதோவின் கதைகள்” குறிப்பிடுகிறது. இந்தப் பெண்ணின் வரவால் பழைய நினைவுகள் மனதைவிட்டு அகன்றுவிட்டன என்று மட்டுமே பாடலில் இருப்பதால் உரையாசிரியர்கள் இருவிதமாகப் பொருள் கொள்கிறார்கள். முந்தைய காதல்கள் யாவும் மறக்கப்பட்டுவிட்டன என்றும் இவர்போன்ற ஒரு பெண்ணைச் சந்திக்கக் காத்திருந்த காலத்தில் ஏற்பட்ட இன்னல்களை இக்காதல் மறக்கச் செய்துவிட்டது என்றும் கூறுகிறார்கள்.

நீ வருவாயென!

இப்பாடலில் நகாட்சுகி (長月) என்றொரு சொல் வருகிறது. நீண்ட நேரம் இருக்கும் நிலவு என்று பொருள். நிலவு நீண்ட நேரம் இருந்தால் இரவும் நீண்டது என்று பொருள். ஓர் ஆண்டின் நீண்ட இரவு வருவது செப்டம்பர் மாதத்தில். இலையுதிர்காலம் தொடங்கும் நேரம். ட்சுகி (月) என்ற சொல்லுக்கு மாதம் என்றும் ஒரு பொருளுண்டு. தமிழில் திங்கள் என்பதை நிலவுக்கும் மாதத்துக்கும் பொதுவாகச் சொல்கிறோமே, அதுபோல. நீண்ட நிலவு இருக்கும் இரவு என்றும் நீண்ட மாதம் காத்திருந்தேன் என்றும் சிலேடையாகப் பொருள் கொள்ளலாம்.

கடவுளும் காணா அதிசயம்

இசேவின் கதைகள், யமாதோவின் கதைகள், கொக்கின்ஷு ஆகிய நூல்கள் இவர் கிழக்கு ஜப்பானுக்கு இரண்டு உதவியாளர்களுடன் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இவ்விடப்பெயர்வு சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கு நோக்கி இன்றைய தோக்கியோ வரை பயணப்பட்டதில் வழியிலுள்ள முக்கியமான இடங்களில் ஒவ்வொரு பாடலைப் புனைந்தார் என இசேவின் கதைகள் குறிப்பிடுகிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியமான இடங்களின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. இது முதல் காரணம். மேலும், அரச குடும்பத்தில் பிறந்து உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறும் இரண்டே இரண்டு உதவியாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வார் என்பதும் பொருத்தமாக இல்லை.