பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா

ராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம்.