என் நோக்கில் சுரா

‘தமிழ்இனி – 2000’ நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ‘ஜே.ஜே.’ நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன்வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, “நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறேன்’’ என்றார். “உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக்கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசிநாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார்.