Femino 16

எழுபது ஜீஎஸ்எம், மென்சிவப்புத் தாளில் கொட்டை எழுத்துகளில் ஃபெமினொ பதினாறின் முதல் துண்டுப் பிரசுரம் அவள் கண்முன்னே விரிந்ததும் ஆயிரம் பெண்களின் ஏக்கமும் நம்பிக்கையும் வேட்கையும் அதன் மேல் சுடராய் எரிவதை ஆயிரம் ஆண்கள் சபித்தபடி வசவுகளால் அச்சுடரை கைகளை வீசியணைப்பது போலவிருந்தது அவளுக்கு. கேடீ பதினாறில் ஒரு விசிறியும் ஒரு எதிரியும் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு ஒரு செவ்வரத்தையும் நந்தியாவட்டையும் அருகருகே பூப்பதைப் போல முளைத்திருப்பார்களென்று அனுமானித்தாள்.

ஆர்கலி

அவன் அந்தத் தகட்டுக்கதவை ஓங்கி அடித்துக்கொண்டிருந்ததில் ஊரே சற்று நேரத்திற்குக் குழுமியிருந்தது. சதகத்தும்மா ஒரு ஓரமாக அத்திவாரத்திட்டில் குந்தியிருந்தாள். கண்ணிலிருந்து நீர்வரத்து நின்றிருந்த பிசுபிசுப்புக்குத் தாடைய ஒட்டவைத்துப் பார்த்தபடியிருந்தாள். கால்களைச் சுற்றி பூனைக்குட்டிகள் ஒன்றன் மீதொன்று வாகாய்ப் படுத்திருந்தன. அத்தனை அவமானத்திலும் பூனைகள் கால்களைக் கவ்வி உரசும் வால்சுரணை கொஞ்ச நேரத்திற்கு இருக்கலாமென்றிருந்தது. கிணற்றைச் சுற்றி குளிக்கக் கட்டிய சீமெந்துக் கட்டின் கீழ் மணல் சாந்தோடு அரித்துப்போனதில் சாய்ந்திருந்தது.