கிரியை

ஒரு நிமிடத்தில் சாலை சீதோஷ்ணம் மாற ஆரம்பித்தது. ஊர்தி ஓரமாக ஒதுங்க, நடந்து போன மக்களும், ஆடிக் கொண்டிருந்தவர்களும் சாலையின் இடப்புறமாக வரிசை கட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். வெடி வைப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. நெற்றி வழிய திருநீறு பூசி ஈர வேட்டி அணிந்து மீசை, தலை சிகை மழித்துக் காணப்பட்ட ஆள் ஆம்புலன்ஸைப் பார்த்து ‘வழி விட்டாச்சு, வேகமா ஆஸ்பத்திரி போங்க’ என்று உரக்க முழங்கினான். தடைகள் விலக சீரான வேகத்தில் ஆம்புலன்ஸ் ஜீவனுடன் ஜீவனற்ற ஊர்தியைத் தாண்டிப் போனது.
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஏதோ நொறுங்குவது போல மனம் ஊசலாட்டம் கொண்டது. உணர்வு, புத்தி, திட்டம் என்று வகுத்துப் பார்த்த யோசனை நீடிக்கவில்லை. உணர்வு மேலோங்கியது. சகலமும் துறந்தவன் பர்ஸில் சில ஆயிரம் ரூபாய் தாள்களை எண்ணிப் பார்த்தான். நான்கைந்து விஸிட்டிங் கார்டுகளை லைட்டர் துணையுடன் சாம்பலாக்கி எழுந்தவன், ஒரு கேரி பேக்கில் பர்ஸை வைத்துக் கட்டி எழுந்தான்.

மெய்யை அப்புறப்படுத்து

ரஃபெயேல்… கொஞ்சம் ஒதுங்கும் சுபாவியாக, கவிதை எழுதுபவனாக, தனிமையைப் பூட்டிக் கொள்பவனாக வளைய வந்தான். தலை சாய்த்து மென்மையாக சிரித்து என்னை அழகாக்கினான். மெருகூட்டினான். என் வனத்தை எனக்குப் புரிய வைத்தான். அவன் மீதான ஈர்ப்புக்கான காரணமென்ன? வழமையான ஐரோப்பியனின் குணாதிசயங்கள் ஏதுமின்றி மாறுபட்டவனாக, வேறுபட்ட இந்தியத்தனத்துடன் வளைய வந்தான். அது தான் ஈர்த்ததா? பனி சூழ்ந்த இரவில் கரம் பற்றி கண் கலங்க நின்றானே, அதுவா? ஏதேதோ பட்டியலிட்டாள். சிந்தனை வரிசைகளற்று ஓடியபடி இருந்தன.‌ தற்கால லௌகீகம் உசுப்பியது.