என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.