ஒப்புதல் (l’Aveu)

அங்கே, மேட்டுப்பாங்கான பகுதியில், படை வீரர்கள் போல வரிசை வரிசையாக  பசுமாடுகள். அவை நிலத்தில் படுத்தவண்ணமும், நின்றவண்ணமும் அவ்வப்போது சூரியனின் கூசச் செய்யும் ஒளிகாரணமாக தங்கள் பெரிய கண்களைச் சிமிட்டியபடி மிகப்பெரிய ஏரிபோன்று பரந்துகிடந்த மணப்புற்களை மேய்வதும் அசைபோடுவதுமாக  இருக்கின்றன. 

அலெக்சாந்தர்

அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்ப்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிறத் தாடியுடன் இருக்கிறார், நல்ல வேலைக்காரர் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.