தனது படைப்புக்களில் பகுத்தறிவு சார்ந்த கருத்துகளை வெளிப்படுத்திய அனந்தமூர்த்தி மக்களின் மரபு சார்ந்த வழிபாட்டு முறைகளைப் பற்றிய விஷயத்தில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார். ஷிமோகா மாவட்டம் சந்திரகுத்தி என்னும் கிராமத்திலுள்ள ரேணுகாம்பா தேவியை வழிபடுபவர்கள் (எல்லா வயதிலுமுள்ள ஆண்களும் பெண்களும்) வருடா வருடம் மார்ச் மாதம் நடக்கும் திருவிழாவில் தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக நிர்வாண வழிபாடு செய்வார்கள். ….பகுத்தறிவாளர்களின் கோரிக்கைக்கும், போராட்டத்திற்கும் பிறகு அரசாங்கம் இதைத் தடைசெய்தது. அப்போது மூடநம்பிக்கை, ஆன்மீகம், பகுத்தறிவு பற்றிய பெரும் விவாதம் எழுந்தது. இந்த நிர்வாண வழிபாட்டை அனந்தமூர்த்தி ஆதரித்தார். ஆழ்ந்த இறையுணர்வில் ஒரு மறைபொருள் அனுபவத்தைத் தரும் நம்பிக்கை சார்ந்த இந்தப் பழக்கம் தனிப்பட்டவரின் உரிமை சார்ந்தது. இதில் பகுத்தறிவுக்கு இடமில்லை என்றார்.