பிடிபடா சலனங்கள்

நிரந்தரமாக ஏதுமில்லாமல் ஒரு அரசியல்வாதிக்கு அடியாள் போல வாழ்வு குறித்து கொஞ்சம் அச்சமாக இருந்தது. தானும் வில்லியம் போல ஒரு அர்த்தமற்ற வாழ்க்கை கொண்டிருக்கிறோம் என நினைத்தான். இன்னும் சொல்லப்போனால் அவனுக்காவது தேட ஒரு அழகிய மனைவி இருக்கிறாள். நமக்கு என்ன இருக்கிறது? இருக்கும்வரை அம்மா தேடுவாள்? இல்லாதபோது? எனும் கேள்வி ராஜாங்கத்தை இம்சை செய்தது. அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பெயர்கூட அர்த்தமில்லாமல் இருப்பது குறித்து நீண்ட பெருமூச்சு வந்தபோது காவல் நிலையத்தை அடைந்திருந்தான்.

வாழ்ந்த இரங்கல்கள்

உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்கிற சாபம் மிக பிரபலம். இறப்பை விடக் கொடியது அது நிகழும் விதம். உறவினர் பேருந்து விபத்தில் இறந்த பொழுது அவருடன் இறந்தவர்கள் எட்டு பேர். உரு தெரியாத அளவிற்கு கோரமான விபத்து அது. தகவல் தெரிவிக்கப்பட்ட போது அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். வாழ்வில் அரசு மருத்துவமனைக்கு செல்லாத அந்த உறவினர் சவக்கிடங்கில் எந்த நிலையில் இருக்கிறாரோ என்று நினைக்கும் போதே மனம் நொந்தது. உடலை அடையாளம் காட்ட ஒருவரை அழைத்தார்கள். சாக அழைத்தது போல் அனைவரும் பின்வாங்கினர்.