படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.