கண்ணாடிப் பரப்பு

அடுத்தநாள் ‘மெகபூபா’ பாடலை மிக மெல்லிய சத்தத்தில் வைத்து தொட்டிக்கு மேலே பிடித்துக்கொண்டேன். வா வா என் அன்பே வாழ்வின் பேரன்பே என்று அலைபேசி அதிர்ந்தது. என்னை போலவே அதற்கும் அந்த ஒலி இனிய அதிர்வாக இருக்குமா என்று தெரியவில்லை. உடனே இந்த மீன் ஆணா பெண்ணா என்று முதன்முதலாக கேள்வி வந்தது. இத்தனை நாள் என்னைப்போலவே அதையும் பெண் என்று நினைத்திருந்தது எத்தனை மடத்தனம் என்று பாடலை நிறுத்தினேன்.

கிஞ்சுகம்

வசிஷ்டர் … .. நிதானமானகுரலில் பேசத்தொடங்கி இறுதியாக, “தசரதன் தன் வேள்வியால் தன்னை எரித்து உண்டாக்கிய பெருந்தீ ராமன். இன்று இளையராணி தொடங்கியிருக்கும் நீண்ட பெருமழையால் அந்த பெரும்வேள்வித்தீ அணையாதிருக்க சீதை உடனிருக்க வேண்டும். சூரியனை அடிவயிற்றில் காக்கும் புவியளித்த வெம்மை சமித்து சீதை. காக்க வேண்டியது அரசகடமை இளவரசே,” என்கிறார்.

தையல்

“சொல்லத் தெரியாம இல்ல லோகு…நம்ம செல்லம் முருங்கமரக்கிளையாட்டம். ஒருமுறியில் ஒடிச்சு நம்மப்பக்கம் வச்சிக்கலாம்…அப்பிடி செஞ்சுட்டு எங்குலசாமி முன்னாடி எப்பிடி போய் நிப்பேன்…”
“குலசாமி எது?”
“பெருமா மல அடிவாரத்து பிச்சாயி…”
“பச்சப்பிள்ளைய கையில வச்சுக்கிட்டு இருக்கறவளா…அதான் நீ இப்படி இருக்குற. எங்கமாறி மருதவீரனா இருக்கனும். குதிரையில தூக்கிப்போட்டுட்டு பறக்கற ஆளு…”என்று சிரித்தாள்.

அமுதம்

வீட்டின் பின்னால் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பார்வதி அரவம் கேட்டு ஓடிவந்து, “டேய்…உன்னப்பெத்தவடா நானு. நாரத்தண்ணியகுடிச்சா பெத்தவக்கூட பொம்பளையா மட்டுந்தான் தெரிவாளா…அவதான் என்னிய வயல்ல கொண்டு போய் போட்டுருங்கன்னா. அதுக்கு உங்கப்பன ஏண்டா அடிச்ச…அவரு எங்கூட இருக்காம உங்களுக்கே பண்ணையாளு வேல செஞ்சுக்கிட்டு வயல்லயே கிடக்கனுமா…” என்று அவன் சட்டையைப் பிடித்தாள்.

மத்தளம் கொட்ட

மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்?

ரீங்கரிப்பு

“நம்ம வயலா செல்வம்?”
அவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போல திரும்பிச் சிரித்துத் தலையாட்டினார்.
“நாத்து வுட்டாச்சு போலயே…”
“ஆமாமா… மூணு குழி… இத வாங்கறதுக்குள்ள இந்தச் சென்மம் மாஞ்சுப்போச்சு…”

சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்- வாசிப்பனுபவம்

வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.