ராபர்ட் கனிகல் எழுதிய The Man Who Knew Infinity என்ற புத்தகத்தின் ஆங்கிலம் மற்றும் தமிழ் பிரதிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இரு வேறு நண்பர்களிடமிருந்து எனக்கு பரிசாய்க் கிடைத்தன. அதுவும் ஒரே டிசம்பர் வாரத்தில் இரு வேறு நாட்களில் இந்தப் புத்தகங்கள் என்னை வந்தடைந்தன (இதோ இதை தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் பிப்ரவரி 14ஆம் தேதியும்கூட புத்தக காதலர்களுக்கு விசேஷமான நாள்: இன்று சர்வதேச புத்தகப் பரிசு தினம் கொண்டாடப்படுகிறது). ஆங்கில புத்தகத்தைக் கொடுத்த நண்பரும் நானும் ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும்போதும் புத்தக பரிவர்த்தனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்கள். அந்த வழக்கப்படி ஆங்கில பிரதி கிடைத்ததில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. 2015ல் கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்வையொட்டிய இந்தப் புத்தகம் திரைப்படமாக வடிவெடுத்து வெளிவந்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். நான் படம் பார்த்திருந்ததால் கதையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது நினைவில் நன்றாகவே பதிந்திருந்தது. எனவே, “அப்புறம் படிக்கலாம்,” என்று ஆங்கிலப் பிரதியை எடுத்து வைத்திருந்தேன்.