“எவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை வளக்கிறம், விரும்பின எல்லாத்தையும் வாங்கித்தாறம், நீ என்னடா எண்டால், களவெடுக்கிறியா, நாயே! பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம் எண்டிட்டினம், இனி என்ன, களவெடுத்துத்தான் சீவிக்கப்போறியோ?” உச்சஸ்தாயில் கத்தினாள்.
அவன் அலற அலற, அவன் புயத்தில், முதுகில் என மாறி மாறி தன் கை வலிக்கும்வரை அடித்தாள். ஏதோ சொல்ல முயன்றவனை “வாயை மூடு நாயே” என அடக்கினாள். அங்குமிங்குமாக நடந்தபடி சத்தமிட்டு அழுதாள், அவனைப் பிடித்து உலுப்பினாள். ஏற்கனவே வாங்கிய அடிகளால் சிவந்துபோயிருந்த அவனின் கன்னத்தில் மீளவும் அறைந்தாள்.