அதிர்ஷ்டம்

அவளுக்கும் இப்படி யாரையாவது காதலிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எப்பவாவது தோன்றும். அதுவும் அந்தக் கூண்டுக்குள் போய் அவர்கள் பேசுகிற கிளர்ச்சியில் அவளுக்கே என்னவோ போலிருக்கும். எப்படியெல்லாம் அந்தரங்கமாய் சீச்சீ, ஆபாசமாகப் பேசிக் கொள்கிறார்கள். ஆண்களை விட கல்லூரிபோகிற பெண்கள் எத்தனை தைரியமாய் உடல் குலுங்கக் குலுங்க சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள்கள். மூணு நிமிடம் தாண்டினால், எக்ஸ்டென்ஷன் என்று பட்டனை அமுக்கச் சொல்லி தொடர்ந்து பேசுகிறார்கள். ஒரு கால் ஒரு ரூபாய். நாலு எக்ஸ்டென்ஷன், மொத்தம் அஞ்சு கால்… என்றால் அலட்சியமாக அஞ்சு ரூபாய் வைத்துவிட்டுப் போகிறார்கள். காதலர் இன்றி பிசிவோவுக்கு வருமானம் இல்லை.

தளும்பல்

அவள் இறந்தபின் உறவினர்கள் விக்னேஸ்வரனிடம் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி அறிவுறுத்தினார்கள். அப்படியொரு யோசனை அவருக்குத் தோன்றவே இல்லை. இந்திரவேணி இறந்தபோது, இந்தப் பெண்ணை என் கையில் ஒப்படைத்துவிட்டுப் போய்விட்டாயே, என்றுதான் அவர் துக்கப்பட்டார்.

உள்வாங்கும் அலை

நாகராஜன், எங்கோ பிறந்திருக்க வேண்டிய பிள்ளை அது. நாகராஜனுக்கு ஊர் பிடிக்கவில்லை. நன்றாகப் படித்தான் நாகராஜன். படிப்பில் அவன் ஆர்வம் அவருக்குப் பிடித்திருந்தது. “ஏல நீ மனம் போனபடி வாசி. எத்தனை ஆங்கிலம் படித்தாலும் தமிழை மறந்திறப்டாது கேட்டியா?” என்பார். சிலமந்தி அலமந்து… திருவையாறு பத்தி ஞானசம்பந்தர். அடாடா. அடாடா. அவர் ஐந்தாவது வரை படித்தவர். ஆங்கிலம் எழுத்துக்கூட்டி வாசிப்பார். கடைபோர்டு பார்த்தால் வாசிக்கத் தெரியும். கடிதத்தில் முகவரி வாசிப்பார். செய்தித்தாள் ஆங்கிலத்தில் வாசிக்கத் தெரியாது. போதாததற்கு பொடிப்பொடி எழுத்துகள். அவ்வளவுக்கு, இத்தனை பக்கத்துக்கு நாட்டில் என்னென்னவோ நடக்கிறது, என்பதே ஆச்சர்யம். மேட்டுப்பட்டியில் காலை விடியல், அந்தியில் அஸ்தமனம், அவ்ளதான் நியூஸ். அட அதுகூட ஒரு நியூசா? இதைப் பேப்பரில் தினசரி போடறதா?

143

அம்மா சில இளகிய போதுகளில் எதுவும் பாடுவாள். முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவள் அல்ல அவள். என்றாலும் சங்கதிகள் தொண்டைக்குள் புரளும் அவளுக்கு. ஈரநாக்கால் பசுமாடு எஜமானனைத் தடவித் தருவது போல அம்மா காற்றால் தொண்டைக்குள் உரசிக் கொடுக்கிறாள். அவனுக்கு ரொம்ப சங்கீதம் தெரியாது என்றாலும் அம்மா பாடும்போது அத்தனை ரசித்து ருசித்துப் பாடுகிறாள் என்பது தெரியும்.