எலிகள் கிடைக்கும் மொத்த உணவையுமே நான்கு மணி நேரத்துக்குக்குள் உண்டுவிடும். மீதி 20 மணி நேரத்திற்கு எதையுமே உண்ணாது என்பதுதான். இதைத்தான் இப்போது “நீண்ட நேர உண்ணாமை“ என்று கூறுகிறோம். இது பல வகைப்பட்டது. அதைப் பிறகு பார்க்கலாம். இதனால் கிடைக்கும் உடல்நலப் பயன்கள் உடற்பளுக் குறைவினாலோ, பிராணவாயு அணுக்களின் தாக்கக் குறைவினாலோ அல்ல. ஆதி கால மனிதர்கள் நம்மைப்போல் 3 வேளை உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த நேரமே அதிகம். அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே தற்கால மனிதர்களிடையே நீண்டநேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.