விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதைக் குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா…