ஆடல்

பாலசரஸ்வதி, மயிலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற பல மகத்தான நடனக் கலைஞர்கள் நடனத்தின் ஆன்மிக உச்சத்துக்கு அதைக் கொண்டுபோயிருந்தாலும், அது “கௌரவ” ஸ்திதியை அடைந்தது ருக்மணிதேவி, கிருஷ்ணய்யர் போன்றவர்களால்தான் என்றுதான் கூறப்பட்டது.  கௌரவமான பெண்கள் என்று கருதப்பட்ட தாசி குடும்பத்தைச் சேராத பெண்களும் ஆடலாம் என்ற அளவுக்கு அது மெருகேறியதே தவிர, ஆடலின் அமைப்போ, வெளிப்பாடோ சிறிதும் மாறவில்லை. கடவுள் என்ற மூலம் ஆட்டம் காணவில்லை. “நடனம் ஆடினார்”, “தெருவில் வரானோ”, “கிருஷ்ணா நீ பேகனே பாரோ”, “ஸாமி நின்னே”(வர்ணம்) போன்ற பாடல்கள்தாம் இன்றும் உணர்ச்சிகளை வெளியிடப் பயன்படுபவை. காதலை வெளியிடும் பெண் இன்றும் பால் குடித்தால் வாந்தி வருவதாகவும், குயிலின் கூவல் நாராசமாய் ஒலிப்பதாகவும், ஹம்ஸதூளிகா மெத்தை குத்துவதாகவுமே விரகத்தை வெளியிடுகிறாள். அன்று ஆடப்பட்ட தாசி ஆட்டம் அன்றைய சமூக வர்க்கபேதங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்காக ஆடப்பட்டது. இன்றைய தாசி ஆட்டம் அல்லது பரதநாட்டியம் சிறிது மாறுதலுடன் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினராலேயே ஆடப்பட்டு, அவர்களாலேயே ஆளப்பட்டு, அவர்களாலேயே போற்றப்பட்டும் வருகிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் உட்படாத ஒரு நபரே இன்றைய ஆடலின் வெளிப்பாட்டுப் பிரதிநிதி. இதனால்தான் இவர்கள் பாதிப்புகள் அற்ற வெறும் ஆட்டக்காரர்களாக (Performers) மட்டும் இருந்து வருகிறார்கள்.