கி.பி. 500-ஆவது ஆண்டுவாக்கில் இந்தியாவில் முதன்முதலாக சர்க்கரை தூள் வடிவத்தில் தயாரிக்கப்பட்டது. சர்க்கரைத் தயாரிப்பு ஒரு தொழில் ரகசியமாகவே பல இடங்களில் கடைபிடிக்கப்பட்டு – குரு-சிஷ்யப் பரம்பரையில் தொடர்ந்து வந்தது. அந்தத் தொழில் ரகசியம் எப்படியோ கசிந்து அடுத்த 100 ஆண்டுகளில் பாரசீக நாட்டிற்குப் (இன்றைய ஈரான்) பரவிவிட்டது. கி.பி. 600-ஆம் ஆண்டில் அந்நாட்டில் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்பட்ட பலவிதமான இனிப்புப் பண்டங்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அரேபியப் படைகள் பாரசீக நாட்டைப் போரில் தோற்கடித்துக் கைப்பற்றியபின், சர்க்கரைத் தயாரிப்பு அரபு நாடுகளுக்கும் பரவியது.