தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 2

அந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்’ போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்து ‘பிரஸன்ன வதனம்’ என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம் “நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்” என்றார்.

பையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்

“தேர் இஸ் நத்திங் ராங் வித் த சைல்ட்” என்றார் சிரித்துக் கொண்டே.

உறவினர் விடாமல் “பையனுக்கு ‘ஆட்டிஸம்’ இருக்கோல்யோ?” என்றார்.

டாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனே “தேர் இஸ் நத்திங் ராங் – ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாக