உள்ளும் வெளியும் பாகம் -2

எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது

உள்ளும் வெளியும்

கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்